போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.
சர்வதேச போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு நாளை முன்னிட்டு சென்னை காவல்துறை மற்றும் செரியன் லைப் மருத்துவமனை இணைந்து போதைப் பொருள் பயன்பாடு எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை நேற்று காலை நடத்தியது.
கோயம்பேட்டில் நடந்த இந்நிகழ்ச்சியை சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் கொடியசைத்து துவக்கி வைத்து பேசியதாவது:
போதைப் பொருள் பயன்பாட்டி னால் உலக அளவில் ஓர் ஆண்டில் சராசரியாக 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் உயிர் இழக்கின்றனர். போதைப் பொருளுக்கும், குற்ற நிகழ்வுகளுக் கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. உலக அளவில் போதை பொருளுக் கும், தீவிரவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பல தீவிரவாத அமைப்புகள் போதைப் பொருள் மூலம் கிடைக்கும் பணத்தின் மூலமே செயல்படுகிறது. எனவே நாம் போதைப் பொருளை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
சமுதாயம் சீரழிந்துவிடும்
போதைப் பொருள் பழக்கத் திற்கு அடிமையானவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டு குணப்படுத்த வேண்டும். மேலும் இந்த பழக்கத்திற்கு அடிமையான வர்களை ஒதுக்கி வைக்காமல் அவர்கள் அதில் இருந்து மீண்டு வர உதவி செய்ய வேண்டும்.
போதைப் பொருள் பழக்கத்தை தடுக்காவிட்டால் சமுதாயம் சீரழிந்துவிடும். ஆகவே இதன் தீவிரத்தை உணர்ந்து அனைவரும் சேவை செய்ய வேண்டும். போதைக்கு அடிமையானவர்கள் தற்போது திருந்தி வருகின்றனர்.
கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத மற்றும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டு அவர்களை படிக்க வைத்து வருகின்றனர் என்றார்.
பின்னர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகிறோம். தேவைப்பட்டால் குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி, கல்லூரி அருகே போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் ஜெயராம், இணை ஆணையர்கள் சந்தோஷ் குமார், பிரேம் ஆனந்த் சின்ஹா, துணை ஆணையர்கள் ரூபேஸ் குமார் மீனா, திருநாவுக்கரசு, டாக்டர் எம் சுதாகர், செரியன் லைப் மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி சக்தி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.