தமிழகம்

வழக்குகளுக்கு விரைவில் தீர்வுகாணவே விடுமுறை கால நீதிமன்றம்: தலைமைப் பதிவாளர் பதில்

செய்திப்பிரிவு

வழக்குகளுக்கு விரைவான தீர்வு காணும் நோக்கத்திலேயே சென்னையில் விடுமுறை கால குடும்ப நல நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது என்று உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பதிலளித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்கள் வார விடுமுறை நாள்களிலும் செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

“கடந்த 2010-ம் ஆண்டு முதல் சென்னை குடும்ப நல நீதிமன்றங்கள் வார விடுமுறை நாள்களிலும் செயல்படுகின்றன. இதனால் விடுமுறை நாள் களிலும் கூட நீதிமன்றத்துக்கு வர வேண்டும் என வழக்கறிஞர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக வழக்கறிஞர்கள் தங்கள் குடும்பங்களுக்கான கடமைகளையும், தொழில் சார்ந்த பல பணிகளையும் கவனிக்க இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டுமானால் நீதிமன்றங்களின் எண்ணிக்கையையும், நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம். மாறாக விடுமுறை நாள்களில் நீதிமன்றம் செயல்படுவது சரியல்ல” என்று அவர் தனது மனுவில் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிஹோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.கலையரசன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே விடுமுறை கால நீதிமன்றம் தொடங்கப்பட்டது. சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விடுமுறை கால நீதிமன்றம் செயல்படத் தொடங்கிய பின் முடித்து வைக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டில் 629 வழக்குகளும், 2011-ல் 539, 2012-ல் 952, 2013-ல் நவம்பர் வரை 459 வழக்குகளும் விடுமுறை கால நீதிமன்றம் மூலமாக முடித்து வைக்கப்பட்டுள்ளன என்று அந்த பதில் மனுவில் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT