உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்டு 7 ஆண்டுகளாக திறக்கப்படாததால் குப்பை கிடங்காக மாறி வீணாகி வருகிறது.
உசிலம்பட்டி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். முருகன் கோயில் பின்புறம் நெருக்கடியான இடத்தில் நகராட்சி அலுவலகம் செயல்படுகிறது. இதனால் புதிதாக அலுவலகம் கட்ட 2009-ல் ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது. 3-வது வார்டில் உள்ள அப்துல்கலாம் நகரில் அலுவலகம் கட்டப்பட்டது. மேலும் 30 லட்சம் அனுமதிக்கப்பட்டு 2010-ல் கூடுதல் கட்டிடம் கட்டப் பட்டது. ஏற்கெனவே இந்த இடத்தின் அருகே நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டன. நகராட்சி அலுவலகம் திறந்ததும், குப்பைகளை வேறு இடத்தில் கொட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக குப்பைக்கிடங்கு வேறு இடத்துக்கு மாற்றப்படவில்லை.
குப்பைகளை மேலும், மேலும் கொட்டி பெரிய கிடங்காக்கிவிட்டதால், புதிய நகராட்சி அலுவலகத்தின் பெரும் பகுதி குப்பை மேட்டுக்குள் புதைந்துவிட்டது. மேலும் குப்பை கிடங்கிலிருந்து 24 மணிநேரமும் வெளியேறும் புகை நகராட்சி கட்டிடத்தை கரிக்கட்டைபோல் மாற்றிவிட்டது. இதனால் அரசுப் பணம் ரூ.80 லட்சம் வீணாகி வரு வதுடன், குடியிருப்பு பகுதிகள் சுகாதாரக்கேட்டில் சிக்கியுள்ளன.
இதுகுறித்து முன்னாள் நகராட்சி தலைவர் பழனியம்மாள் தங்கமலைப்பாண்டி கூறுகையில், “அனைத்து வசதிகளுடன் நகராட்சி அலுவலகத்தை கட்டினோம். அப்போது அங்கு குப்பைகள் சிறிய அளவில் கொட்டப்பட்டன. அலுவலகம் திறந்ததும், நகராட்சிக்கு வெளியே 5 கி.மீ. தொலைவில் குப்பைக்கிடங்கை மாற்றத் திட்டமிட்டோம். ஆனால் 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தால் எங்களால் பணியை தொடர முடியவில்லை. பின்னர், பொறுப் புக்கு வந்தவர்கள் நகராட்சி அலு வலகத்தை திறப்பதில் ஆர்வம் காட்டாததுடன், அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கவும் இல்லை. இதனால் குப்பைக் கிடங்குக்கு மத்தியில் நகராட்சி அலுவலகம் சிக்கி வீணாகிவிட்டது. இதன் பின்னர் ரூ.1 கோடியில் வாங்கப்பட்ட குப்பைகளை தரம் பிரித்து அழிக்கும் இயந்திரமும் நகராட்சி புதிய கட்டிடத்தில் வைக்கப்பட்டு, அதுவும் பாழாகிவிட்டது” என்றார்.
அப்துல்கலாம் நகர் குடியிருப் போர் சங்க நிர்வாகி வேல்முருகன் கூறுகையில், “குப்பைக்கிடங்கில் வெளியேறும் புகையால், அப்பகுதியில் உள்ள 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். அலு வலகம், இயந்திரம் என ரூ.2 கோடிவரை மக்கள் பணம் வீணாக் கப்பட்டு விட்டது. இப்பகுதியி லிருந்து குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்று வதுடன், நகராட்சி அலுவல கத்தை சீரமைத்து செயல்படுத்த உரிய ஏற்பாட்டை அரசு செய்ய வேண்டும். எங்களின் கோரிக்கை இதுவரை ஏற்கப்படாதது வேதனை அளிக்கிறது” என்றார்.
இது குறித்து கருத்தை அறிய நகராட்சி ஆணையர் சுப்பையாவை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.
வேல்முருகன்