தமிழக பாஜக மாநில தலைவராக, தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் கட்சித் தலைவர் அமித்ஷா இந்த அறிவிப்பை வெளியிட்டார். தமிழக பாஜகவுக்கு தலைவராக நியமிக்கப்படும் முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக நியமனம் ஆனதையடுத்து தமிழக பாரதீய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக தமிழிசை சவுந்தரராஜன் தேசியச் செயலராக இருந்தார். பாஜக மாநில பொதுச்செயலர், துணைத் தலைவர் பதவிகளை ஏற்கனவே வகித்துள்ளார்.
தமிழக பாஜக செய்தி தொடர்பாளராக லலிதா குமாரமங்கலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் இன்று பாஜக தலைவர் அமித் ஷா, கட்சியின் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். அதன்படி தமிழக பாஜக மாநில தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், மத்தியப்பிரதேசம் மாநிலத்திற்கு நந்த்குமார் சிங் சவுஹான், சத்தீஸ்கர் மாநிலத்திற்கு தர்மபால் கவுசிக், அசாம் மாநிலத்திற்கு சித்தார்த் பட்டாச்சார்யா ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகள் குழுவில், 11 துணைத் தலைவர்கள், 8 பொதுச்செயலாளர்கள், 4 இணை பொதுச்செயலாளர்கள், 14 செயலாளர்கள், 10 செய்தித்தொடர்பாளர்கள் ஒரு அலுவல் காரியதரிசி உள்பட 53 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களை தவிர தமிழகம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், அசாம் மாநிலங்களுக்கு புதிய மாநில தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வருண் காந்தி நீக்கம்:
மிகுந்த ஆச்சர்யம் தரும் நடவடிக்கையாக, உ.பி. மாநிலம் சுல்தான்பூர் பாஜக எம்.பி. வருண் காந்தி கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். செய்தித்தொடர்பாளர் ராம் மாதவ் பாஜக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெ.பி. நட்டா, ராஜீவ் பிரதாப் ரூடி, முரளிதர் ராவ், ராம்லால் ஆகியோர் பொதுச் செயலாளராக மீண்டும் தொடர்கின்றனர்.
அதேவேளையில், கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கட்சியின் துணைத் தலைவராக உயர்த்தப்பட்டுள்ளார்.
லலித் குமார் மங்கலம், நளின் கோஹ்லி, சம்பித் பத்ரா, அனில் பலோனி, ஜி.வி.எல். நரசிம்ம ராவ் ஆகியோர் பாஜக புதிய செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.