தமிழகம்

ஆளுநர் உரையுடன் தொடங்கியது புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்: 20 நாட்கள் நடத்தக் கோரி அதிமுக போராட்டம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் கிரண்பேடி உரையுடன் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

20 நாட்கள் இத்தொடரை நடத்தக்கோரி சட்டப்பேரவைக்கு வந்த கிரண்பேடியை வழிமறித்து அதிமுக எம்எல்ஏக்கள் மனு தந்தனர். அத்துடன் பேரவை தொடங்கியதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வென்று ஆட்சியமைத்த பிறகு முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மரபுப்படி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சட்டப்பேரவையில் உரையாற்ற வந்தார். அப்போது போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து சபாநாயகர் வைத்திலிங்கம், சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட் ராயர் ஆகியோர் ஆளுநர் கிரண்பேடியை வரவேற்று பேரவைக்கு அழைத்து சென்றனர்.அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், அசானா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் ஆளுநரை வழிமறித்து மனு தந்தனர். அதில் முக்கிய பிரச்சினைகளை பேச வேண்டியுள்ளதால் பட்ஜெட் கூட்டத்தொடரை 20 நாட்களுக்கு குறையாமல் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடியை சபாநாயகர் அழைத்து சென்று தனது இருக்கையில் அமர வைத்தார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் பேரவை நிகழ்ச்சிகள் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடி ஆங்கிலத்தில் 40 நிமிடங்கள் உரையாற்றினார்.

பேரவைக்குள் இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் கையில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் 20 நாட்களுக்கு சட்டப்பேரவையை நடத்த வேண்டும் என எழுதப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆளுநரின் ஆங்கில உரையை சபாநாயகர் வைத்திலிங்கம் தமிழில் வாசித்தார் அதனைத் தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடி பேரவையில் இருந்து விடைபெற்று சென்றார். அத்துடன் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முடிவுற்றன.

முதலில் வந்த ரங்கசாமி: சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சித்தலைவராக தேர்வு பெற்ற முன்னாள் முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவைக்குள் முதலில் வந்தார். அவருடன் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வந்தனர். அதைத்தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி வந்தார்.

அவர் ரங்கசாமிக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள், திமுக எம்எல்ஏக்கள் ஆகியோரும் கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்து சிரித்து பேசியபடி இருந்தனர்.

29ல் பட்ஜெட்: 25 மற்றும் 26ம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற உள்ளது. இதில் அனைத்சது உறுப்பினர்களும் பங்கேற்று பேசுவர். இறுதியில் முதல்வர் நாராயணசாமி பதில் அளிப்பார்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பிறகு மீண்டும் 29-ந்தேதி சட்டப்பேரவை கூடுகிறது. அன்றைய தினம் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இந்க பட்ஜெட் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைந்து தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் மட்டுமின்றி, முதல்வராக நாராயணசாமி பொறுப்பேற்று தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்டும் இதுதான்.

SCROLL FOR NEXT