சென்னையில் உள்ள ‘தி இந்து’ அரசியல் மற்றும் கொள்கைகளுக்கான ஆய்வு மையத்தில் ‘தேர்தல் கருத்துக்கணிப்புகள், வாக்காளர்களுக்கு வழிகாட்டியாக உள்ளதா அல்லது திசைதிருப்பும் வகையில் உள்ளதா’ என்ற தலைப்பில் பொதுவிவாத நிகழ்ச்சி, வெள்ளிக்கிழமை நடந்தது. தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள், விவாதத்தில் பங்கேற்றனர். இதில் தேமுதிக, பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கருத்துக் கணிப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தன. திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள், கருத்துக்கணிப்புகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றன.
நிகழ்ச்சியை, கஸ்தூரி அண்ட் சன்ஸ் சேர்மன் என்.ராம் தொகுத்து வழங்கினார். அவர் தனது வரவேற்புரையில் கூறியதாவது:
இன்றைய நிகழ்வில் (தேர்தல்) கருத்துக் கணிப்புகளைப் பற்றி விவாதிக்க இருக்கிறோம். 90-களில்
கருத்துக் கணிப்புகளுக்குத் தேர்தல் ஆணையம் தடை விதிக்க முயன்றபோது இந்து குழுமம் சார்பில் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இறுதியில், ஆணையத்தின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள் முதல் கருத்துக்கணிப்பை நடத்தவோ, முடிவுகளை வெளியிடவோ தடை செய்யும் சட்டத்திருத்தம் கொண்டு வருவது பற்றிய பரிந்துரையை மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. 2004-ல் இது தொடர்பான கடிதத்தை தேர்தல் ஆணையம் எழுதியபோது அனைத்துக் கட்சிகளும் ஒருசேர எதிர்த்தன. ஆனால், இப்போது பா.ஜ.க.வின் நிலைப்பாடு மாறியுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்புகள், வாக்காளர்களுக்கு உதவிகரமாக உள்ளதா, இல்லையா என்பது பற்றி இன்று விவாதிக்கப்பட உள்ளது என்றார்.
அதைத் தொடர்ந்து விவாதத்தில் தலைவர்கள் பேசியதாவது:
பி.எஸ். ஞானதேசிகன் (தமிழக காங்கிரஸ் தலைவர்): வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்கு முன்பே அதுபற்றிய கணிப்புகளை வெளியிடுவது நியாயமற்றது. இந்தக் கணிப்புகளை தனியார் செய்தி நிறுவனங்கள் நடத்துகின்றன. ஒரு கருத்துக்கணிப்பை நடத்துவதற்கு சுமார் ரூ.3.5 கோடி செலவாகிறது. இதற்கு யார் நிதி உதவி அளிப்பது என்பது வெளிப்படையாகத் தெரிவதில்லை. பெரும்பாலான நாளிதழ் மற்றும் தொலைக்காட்சிகள், குறிப்பாக தமிழகத்தில் அரசியல் கட்சிகளால் நடத்தப்படுகின்றன. இதனால் தேவைக்கு ஏற்ப கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் மாற்றி வெளியிடப்படுகின்றன.
எந்தக் கட்சிக்கு ஓட்டுப்போடுவது என்று முடிவெடுக்காமல் இருக்கும் 20 சதவீத வாக்காளர்களை கருத்துக்கணிப்பு முடிவுகள் பாதிக்கும். ஏனெனில், வெற்றி பெறுவார்கள் என்று நினைப்பவர்களுக்கு ஓட்டு போடுவது என்ற மனப்போக்கு இந்தியர்களிடம் பொதுவாகவே காணப்படுகிறது.
எச்.ராஜா (பா.ஜ.க. மாநில துணைத் தலைவர்): கருத்துக்கணிப்புகள் வரவேற்கத்தக்கவை. அவற்றால்தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடாது. மக்கள் அவ்வளவு விவரம் தெரியாதவர்கள் அல்ல.அவர்கள் தெளிவாக வாக்களிப்பவர்கள். உத்தரப்பிரதேசத்தில் தொங்கு சட்டசபை உருவாகும் என்று கணிப்புகள் வந்தபோதும், சமாஜ்வாதி கட்சியை மக்கள் ஆட்சியில் அமர வைத்தார்கள். தேர்தல் அறிவிக்கைக்குப் பிறகு கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடக் கூடாது என்பது தவறு. வேட்புமனு பரிசீலனைக்குப் பிறகு அவற்றை நிறுத்தி வைப்பதை பரிசீலிக்கலாம். கருத்துக்கணிப்பை தடை செய்வது அறிவியல் வளர்ச்சியை தடை செய்வது போன்றதாகும்.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர்): கருத்துக்கணிப்பை முழுவதுமாக தடை செய்யக்கூடாது. அதை அனுமதிக்கலாம். ஆனால், அதை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், குறிப்பிட்ட காலத்துக்கு வெளியிடக்கூடாது என்று வரைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட காலம் என்பது பற்றி, அரசியல் கட்சிகள் மற்றும் தொடர்புடைய பல்வேறு தரப்பினருடன் தேர்தல் ஆணையம் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். கருத்துக் கணிப்பு பலநேரங்களில் பொய்த்துப் போகிறது. இதற்கான நடைமுறைகள் விஞ்ஞானப்பூர்வமாக இல்லை. தேர்தல் ஆணையம் இதற்கான நடைமுறைகளை வகுக்க வேண்டும்.
தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): கருத்துக் கணிப்புகள் நேர்மையான முறையில் நடத்தினால் தவறு இல்லை. பத்திரிகைகளுக்கு விளம்பர வருமானம் முக்கியமானதாக உள்ளது. அதனால், தங்களது நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஆளுங்கட்சிக்கோ அல்லது அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சிக்கோ ஆதரவாக சில செய்தி நிறுவனங்கள் நடந்து கொள்கின்றன. இது மக்களை திசைதிருப்பும் செயல் ஆகும். கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் உண்மையாக இருப்பதில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான் வெற்றி பெறுவேன் என்று கணிப்புகள் கூறின. ஆனால், தோற்றுவிடுவார் என்று கணிக்கப்பட்டவர் (டி.கே.எஸ். இளங்கோவன்) வெற்றி பெற்று இங்கு அமர்ந்திருக்கிறார்.
அதனால் கருத்துக் கணிப்புக்கு தடை வேண்டாம். அதற்கு சில வரைமுறைகள் வகுக்கப்பட வேண்டும். ஆனால், அவை செய்தி நிறுவனங்களின் உரிமையைப் பறிப்பதாகவும் இருக்கக்கூடாது.
டி.கே.எஸ். இளங்கோவன் (திமுக அமைப்புச் செயலாளர்): தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபிறகு, கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடக்கூடாது. தேர்தலின்போது, ஒரு தரப்புக்கு ஆதரவானவர்கள், எதிரானவர்கள் மற்றும் எந்த முடிவும் எடுக்காதவர்கள் என வாக்காளர்களில் மூன்று பிரிவினர் உள்ளனர். கருத்துக்கணிப்பு முடிவுகள், மூன்றாம் தரப்பினரிடையே தாக்கத்தை ஏற்படுத்தும். பத்திரிகை சுதந்திரத்தை நாங்கள் பறிக்க விரும்பவில்லை. தேர்தல் நெருக்கத்தில் அரசியல் கட்சிகள், மக்களிடம் சென்று தங்களது சாதனைகளை, கொள்கைகளை சொல்ல வாய்ப்பு அளிக்க வேண்டும்.
பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக அவைத் தலைவர்): தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்கக்கூடாது. ஒரு வாக்காளன்தான் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கிறான். கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு மாறாக பல தேர்தல்களில் முடிவுகள் வந்துள்ளன. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் பற்றி தெரிவிப்பது முக்கியம். அதை மக்களுக்கு எந்தெந்தவிதத்தில் தெரிவிக்க முடியுமோ அவ்வழிகளில் தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு தலைவர்கள் பேசினர்.அதைத் தொடர்ந்து பொதுமக்கள், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு கட்சித் தலைவர்கள் பதில் அளித்தனர்.இந்நிகழ்ச்சியில், கஸ்தூரி அண்ட் சன்ஸ் கோ-சேர்மன் என்.முரளி, ‘இந்து’ எடிட்டர் இன் சீஃப் என்.ரவி, எடிட்டர் மாலினி பார்த்தசாரதி மற்றும் சென்னை கணிதவியல் நிறுவன இயக்குநர் ராஜீவ கரன்டிகர் ஆகியோர் பங்கேற்றனர்.