தமிழகம்

பயணக் கட்டணம், உணவுச் செலவுக்காக அரசின் உதவியை எதிர்நோக்கும் வீல்சேர் கூடைப்பந்து வீரர்

ஜெ.ஞானசேகர்

வீல்சேர் கூடைப்பந்து இந்திய அணியில் இடம் பிடித்துள்ள திருச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வீரர், சென்னை சென்று வருவதற்கான பயணக் கட்டணம் மற்றும் உணவுச் செலவு ஆகியவற்றை தமிழக அரசே முழுமையாக ஏற்று உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டத்துக்குட்பட்ட மின்னத்தம்பட்டியைச் சேர்ந்தவர் ச.ரமேஷ் (23). திருச்சி- புதுக்கோட்டை சாலையில் குண்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்ஸி., (பயோ கெமிஸ்ட்ரி) இறுதியாண்டு படித்து வருகிறார்.

இவரது தந்தை சண்முகம் விவசாயக் கூலி வேலைக்கும், தாய் அமிர்தம் நூறு நாள் வேலைக்கும் செல்கின்றனர்.

3-ம் வகுப்பு படித்தபோது மணல் லாரி மோதியதில், தனது இடது காலை முழுமையாக இழந்துவிட்டார் ரமேஷ். இருப்பினும், தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்திய இவருக்கு, திருச்சி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கச் செயலாளரான மாரிக்கண்ணன் உதவியால் 2014-ல் சென்னையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அங்குதான் வீல்சேர் கூடைப்பந்து போட்டி என்ற ஒன்று இருப்பதே ரமேஷுக்குத் தெரிய வந்தது.

ஒரு ஓரத்தில் நின்று அந்த விளையாட்டுப் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ், ஆர்வம் காரணமாக தன்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு அங்கிருந்த பயிற்சியாளரிடம் கேட்க, உடனடியாக மாற்று வீரராக அந்தப் போட்டியிலேயே களமிறக்கப்பட்டார்.

தொடர்ந்து, ‘சென்னை கழுகுகள் கிளப்’ அணியில் சேர்ந்து, தமிழ்நாடு அணியில் இடம் பிடித்து, குறுகிய காலத்திலேயே, தற்போது இந்திய அணிக்கும் முன்னேறியுள்ளார்.

2014 சென்னையிலும், 2015-ல் டெல்லியிலும் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு அணி சார்பில் களமிறங்கியுள்ளார்.

மாதந்தோறும் மாற்றுத் திறனாளி உதவித் தொகையாக ரூ.1,000 பெற்று வரும் ரமேஷுக்கு, பயிற்சிக்காக சென்னை செல்லவும், உணவுச் செலவுக்காகவும் 6 மாதங்களுக்காக ரூ.15,000 நிதியை மாவட்ட நலப் பணி நிதிக் குழுவில் இருந்து ஆட்சியர் கே.எஸ்.பழனசாமி நேற்று வழங்கினார்.

2020-ல் டோக்கியோவில் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி தயாராகிவரும் நிலையில், அதில் முழுத் திறனையும் வெளிப்படுத்தி நாட்டுக்குப் பெருமை சேர்க்க விரும்பும் தனக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வீல்சேர் வழங்க வேண்டும் என்றும், பயிற்சிக்காக சென்னை சென்று வரவும், அங்கு உணவுக்கு ஆகும் செலவுகளையும் தமிழக அரசே முழுமையாக ஏற்று உதவ வேண்டும் என்று ரமேஷ் எதிர்பார்க்கிறார்.

இதுகுறித்து, ‘தி இந்து’விடம் ச.ரமேஷ் கூறியது: கடந்த இரண்டரை ஆண்டுகளாக வாரந்தோறும் வெள்ளியன்று இரவு சென்னைக்கு புறப்பட்டுச் சென்று பயிற்சியில் பங்கேற்றுவிட்டு, மீண்டும் ஞாயிறன்று இரவு புறப்பட்டு திருச்சி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைக் கட்டணத்தில் சென்னை சென்று வருகிறேன்.

2015-ல் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றதை ஊக்கப்படுத்தி மாவட்ட நலப் பணி நிதிக் குழு சார்பில் ரூ.5,000 அளித்தனர். அதேபோல, தற்போது சென்னையில் தொடர்ந்து பயிற்சிக்கு சென்று வரவும் உணவு செலவுக்காகவும் 6 மாதங்களுக்காக ரூ.15,000 நிதியுதவியை ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி அளித்தார்.

இருப்பினும், வறிய நிலையில் உள்ள எனக்கு சலுகை பயணக் கட்டணச் செலவும் இல்லாமல் இருந்தால் பேருதவியாக இருக்கும். எனவே, பயிற்சி மற்றும் உணவுச் செலவுகளை தமிழக அரசே முழுமையாக ஏற்று எனக்கு உதவ வேண்டும்.

அதேபோல, சென்னை செல்லும் நாட்களைத் தவிர பிற நாட்களில் திருச்சியிலேயே பயிற்சி மேற்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் எனக்கு வீல்சேர் வழங்கி உதவ வேண்டும். அணியின் பிற வீரர்களுடன் ஒருங்கிணைந்து எனது முழுத் திறமையை வெளிப்படுத்தி நாட்டுக்கு நிச்சயம் பெருமை சேர்ப்பேன்” என்றார்.

SCROLL FOR NEXT