சட்டப்பேரவையிலிருந்து திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டதைக் கண் டித்து சென்னையில் திமுக சார்பில் 4 இடங்களில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடல்:
சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே உள்ள விளையாட்டுத் திடலில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் 8 ஆயிரம் பேர் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரு மான மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி, வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வாகை சந்திரசேகர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
உண்ணாவிரதப் போராட் டத்தை தொடங்கி வைத்து பேசிய மா.சுப்பிரமணியன், ‘‘சட்டப் பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித் தும், எதிர்க்கட்சிகளே இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி யதைக் கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தமிழகத்தில் உள்ள பினாமி ஆட்சியை அகற்றும் வரை எங்களின் போராட்டம் ஓயாது’’ என்றார்.
வள்ளுவர் கோட்டம்:
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமையில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, அண்ணா நகர் தொகுதி எம்எல்ஏ எம்.கே.மோகன், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா, பேச்சாளரும், கவிஞருமான மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர். காங்கிரஸ் முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் ஊடக பிரிவு மாநிலத் தலைவர் ஆ.கோபண்ணா, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் வந்து உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆர்.கே.நகர்:
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார் பேட்டை ரயில் நிலையம் அருகே சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமி, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.டி.சேகர், மாவட்ட அவைத் தலைவர் துரை, திமுக மகளிர் பிரச்சார குழு செயலாளர் சிம்லா முத்துச்சோழன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டு பேசினர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஜெ.அன்பழகன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் எம்எல்ஏ எச்.வசந்தகுமார், முன்னாள் எம்பி ஜே.எம்.ஆரூண் உள்ளிட்டோர். | படம்: ம.பிரபு
தங்கசாலை மணிகூண்டு:
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தங்கசாலை மணிக்கூண்டு அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் , எம்எல்ஏக்கள் ரங்கநாதன், தாயகம் கவி, மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கபாஷ்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர் உள்ளிட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
புறநகரில்: காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மறை மலை நகர் பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாள ரும் ஆலந்தூர் சட்டப்பேரவை உறுப்பினருமான தா.மோ, அன்பரசன் தலைமை தாங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் தாம்பரம் எஸ். ஆர். ராஜா, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், பல்லா வரம் இ.கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.