தமிழகம்

வரிச் சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை: வருமானவரி, சமூகத் திட்டங்கள் ஏமாற்றம்- ராமதாஸ்

செய்திப்பிரிவு

மத்திய நிதிநிலை அறிக்கை ஒரு சில நன்மைகளையும், ஏராளமான ஏமாற்றங்களையும் கொண்ட ஆவணமாக அமைந்திருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

2017&18 ஆம் நிதியாண்டிற்கான ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். நிதி பரிமாற்றத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்காகவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கவும் வசதியாக அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் தனிநபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாலும், பிற காரணங்களாலும் மக்களின் வருவாயும், அதற்கேற்ற வகையில் செலவுகளும் அதிகரித்துள்ள நிலையில் அதற்கேற்றவாறு வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்த நிதியமைச்சர் மறுத்துவிட்டார். மாறாக, ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானவரி விகிதம் 10 விழுக்காட்டிலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. சேமிப்புத் திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கான வரிச்சலுகைகள் மூலம் ஓரளவு வரிவிலக்கு கிடைக்கும் என்பதால் பெரும்பாலான மாத ஊதியதாரர்கள் ரூ.5 லட்சம் வரை வரி செலுத்த வேண்டியிருக்காது. இதனால் வருமானவரி விகிதம் குறைப்பால் பயனும் இல்லை. வருமானவரி விலக்கு வரம்பு ரூ.4 லட்சமாகவோ, ரூ.5 லட்சமாகவோ உயர்த்தப்பட்டிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

அதுமட்டுமின்றி, ரூ.5 லட்சம் வருவாய் வரை 5% வரி வசூலிக்கப்படும் நிலையில் அதற்கு மேல் 20% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரி விகிதம் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலையில் 15% உயருவதால் ரூ.5 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுபவர்கள் அதில் முடிந்தவரை கணக்கில் காட்டாமல் மறைக்க முயல்வார்கள். ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் காட்டும் 76 லட்சம் பேரில் 56 லட்சம் பேர், அதாவது 73.68 விழுக்காட்டினர் மாதாந்திர வருமானம் ஈட்டுபவர்கள் ஆவர். இந்தியாவில் தனிநபர் வருமானத்தை பொருத்தவரை அமைப்பு சார்ந்த மாத ஊதியம் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட, அமைப்பு சாராத முறைகளில் ஈட்டப்படும் தனிநபர் வருமானம் பலமடங்கு அதிகமாகும். ஆனால், தனிநபர் மாத ஊதியம் மூலம் காட்டப்படும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கணக்குக் காட்டப்படுவதிலிருந்தே, பெருமளவு வரி ஏய்க்கப்படுவதை உணரலாம். இத்தகைய வருவாய் பிரிவினரை வரி வளையத்திற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் அறிவிக்கப்படாதது பெரும் குறையாகும்.

அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்குடன் ரூ.2000&க்கு மேல் ரொக்கமாக நன்கொடை வசூலிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேபோல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டு வருமானம் ரூ.50 கோடிக்கும் குறைவாக உள்ள நிறுவனங்களுக்கான வரி விதிப்பு 30விழுக்காட்டிலிருந்து 25%ஆக குறைத்திருப்பதும் சாதகமான பயன்களை ஏற்படுத்தும். ரூ.3 லட்சத்துக்கும் மேல் ரொக்கப் பரிவர்த்தனைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. மொத்தத்தில் பணமதிப்பு நீக்கத்தின் நீட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சீர்திருத்தங்கள் வரவேற்கத் தக்கவை ஆகும். அதேபோல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிக முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நிச்சயம் வழிவகுக்கும்.

விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்துவது தான் தங்களின் நோக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் அருண்ஜேட்லியும் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதேபோல், இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள பிரிவினரில் உழவர்கள் தான் முதலிடத்தில் இருந்தனர். ஆனால், அவர்களின் நலனுக்காக எந்த திட்டங்களும் அறிவிக்கப்பட வில்லை. நாடுமுழுவதும் உழவர்கள் பயிர்க்கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலையில் தவித்து வரும் நிலையில், அவர்களின் துயரங்களை தீர்க்க கடன் தள்ளுபடி அறிவிக்கப்படாதது சோகமே.

-மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு வரலாறு காணாத வகையில் ரூ.48,000 கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பெருமிதம் அடைந்திருக்கிறார். ஆனால், கடந்த ஆண்டு இத்திட்டத்திற்கு முதலில் ரூ.38,500 கோடி பின்னர் கூடுதலாக ரூ.8,500 கோடி என மொத்தம் ரூ.47,000 கோடி ஒதுக்கப்பட்டும் அது போதாமல் ரூ.10000 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது. இத்தகைய நிலையில் இப்போது ரூ.1000 கோடி மட்டும் கூடுதலாக ஒதுக்கியிருப்பதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. அதேபோல், கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, விவசாயம் போன்ற சமூகத் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு மிகக்குறைந்த அளவிலேயே அதிகரிக்கப்பட்டிருக்கிறது. எனினும், மகளிர் மற்றும் குழந்தைகள் நலனுக்கு ரூ.1.84 லட்சம் கோடி ஒதுக்கீடு மனநிறைவளிக்கிறது.

அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கும் பணி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடையும், கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும், அனைவருக்கும் வீட்டு வசதியை ஏற்படுத்தித் தருவதற்காக வரிச்சலுகைகளும், வட்டித் தள்ளுபடியும் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் நிறைவாக உள்ளன. ஆனால், வறுமை ஒழிப்பு திட்டங்களோ, வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான திட்டங்களோ நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படாதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

தொடர்வண்டித்துறைக்கு கடந்த 92 ஆண்டுகளாக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், இம்முறை அது பொதுநிதிநிலை அறிக்கையுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான தொடர்வண்டித்துறைக்கு ரூ.51,000 கோடி மட்டுமே அரசு உதவியாக வழங்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மட்டும் ரூ.1.19 லட்சம் கோடி நிதி தேவை என தொடர்வண்டித்துறை அமைச்சர் கோரியிருந்த நிலையில், மிகக் குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கப்பட்டிருப்பதால் பற்றாக்குறையை சமாளிக்க தொடர்வண்டிக் கட்டணம் விரைவில் உயர்த்தப்படும் ஆபத்து உள்ளது. மொத்தத்தில் மத்திய நிதிநிலை அறிக்கை ஒரு சில நன்மைகளையும், ஏராளமான ஏமாற்றங்களையும் கொண்ட ஆவணமாக அமைந்திருக்கிறது.

          
SCROLL FOR NEXT