2018-ம் ஆண்டு ஏவப்பட உள்ள சந்திரயான்-2 செயற்கைக்கோள் நிலவில் இறங்கி, மாதிரிகளைச் சேகரிக்கும் என்று திருவனந்தபுரம் இஸ்ரோ விஞ்ஞானியும், விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இணை இயக்குநருமான எஸ்.பாண்டியன் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கருக்காடிப்பட்டி கிராமத் தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் கழகம் சார்பில் நேற்று நடைபெற்ற கல்வித் திருவிழாவில் பங்கேற்ற அவர், 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப் பெண் பெற்ற மாணவ, மாணவி களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நான் இப்பள்ளி யின் முன்னாள் மாணவர். நாங்கள் படிக்கும்போது பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் மிகவும் குறை வாக இருக்கும். ஆனால், தற்போது 100 சதவீதம் தேர்ச்சி அடைவது பாராட்டுக்கு உரியது.
அண்மையில் 20 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் ஏவி, இந்தியா சாதனை படைத்தது. இதில், 13 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவுக்குச் சொந்த மானவை. செலவு குறைவு என்ப தால், அனைவரும் இந்தியாவை நாடுகின்றனர்.
2014-ல் செவ்வாய் கிரகத் துக்கு மங்கள்யான் அனுப்பப் பட்டது. 2018-ல் அனுப்பப்படும் சந்திரயான்-2 நிலவில் இறங்கி, மாதிரிகளை எடுத்து அனுப்பும். அதேபோல, 2020-ல் வெள்ளி (வீனஸ்) கிரகத்துக்கு செயற்கைக் கோள் அனுப்பப்பட உள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி மற்ற நாடுகளைப் பொறாமைப்பட வைத்துள்ளது. இந்தியா சொந்த மாக ஐஆர்என்எஸ்எஸ் எனப் படும் நாவிகேஷன் சேவையை உருவாக்கி உள்ளது. இதற்காக, 7 செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இன்னும் 2 ஆண்டுகளில் இது அமெரிக் காவின் ஜிபிஎஸ் சேவையை விஞ்சிவிடும். சார்க் நாடுகளுக் காகவே ஒரு செயற்கைக் கோளை உருவாக்க பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
இந்தியாவிடம் 35-க்கும் மேற் பட்ட செயற்கைக்கோள்கள் உள் ளன. இதன் மூலம், கனிமவளம், வானிலை, பருவ மழை, தொலைத் தொடர்பு, தொலைக் கல்வி, தொலை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகள் மக்க ளுக்கு கிடைத்து வருகின்றன.
ஆளில்லா லெவல் கிராசிங்கு களை செயற்கைக்கோள் மூலமாக கண்காணிக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின் றன. இதனால் விபத்துகள் தவிர்க்கப்படும் என்றார்.