தமிழகம்

தமிழகத்தில் கலாச்சார சுற்றுலாவை வளர்க்க வேண்டும் : உச்ச நீதிமன்ற நீதிபதி

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கலாச்சார சுற்றுலாவை வளர்க்க சுற்றுலாத் துறை முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் வலியுறுத்தி உள்ளார்.

பாரதிய வித்யா பவன் சார்பில் நடத்தப்படும் நாட்டியத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி, சென்னையில் சனிக்கிழமை நடந்தது. விழாவைத் தொடங்கி வைத்து நீதிபதி பி.சதாசிவம் பேசியதாவது:

5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான நம் நாட்டின் கலாச்சார வளமை குறித்து சில வார்த்தைகளில் மட்டும் கூறி விட முடியாது. பாரம்பரியமிக்க இந்திய கலாச்சாரம், நம் நாட்டில் மட்டுமின்றி இன்று உலக நாடுகளிலும் பரவி யுள்ளது.

அத்தகைய பெருமைமிக்க நம் கலாச்சாரத்தை உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் மேலும் பரவச் செய்யும் நோக்கில் பாரதிய வித்யா பவனை கே.எம்.முன்ஷி தொடங்கினார். அந்த வகையில் பாரதிய வித்யா பவன் நடத்தும் இந்த நாட்டியத் திருவிழா, மிகச் சிறந்த கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தி கொண்டாட வாய்ப்பளிக்கும் மேடையாகத் திகழ்கிறது

தமிழகத்தைப் பொருத்தமட்டில் பாரம்பரிய கலாச்சாரத்தின் பெட்டகமாக திகழ்கிறது. இங்குள்ள 8 இடங்களை சர்வதேச பாரம்பரியச் சின்னங்களாக யுனஸ்கோ அங்கீகரித்துள்ளது. இத்தகைய சூழலில், பாரதிய வித்யா பவன் போன்ற அமைப்புகளுடன் இணைந்து தமிழகத்தில் கலாச்சார சுற்றுலாவை வளர்ப்பதற்கான முயற்சிகளை தமிழ்நாடு சுற்றுலாத் துறை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு நீதிபதி சதாசிவம் பேசினார்.

விழாவில் பரத நாட்டியக் கலை ஞர் மாளவிகா சருக்கைக்கு ‘பி.ஓபுல் ரெட்டி மற்றும் பி.ஞானாம்பாள் நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.

மேலும் பாரதிய வித்யா பவன் வழங்கிய விருதுகளை வயலின் கலைஞர் எம்.நர்மதா, வாய்ப்பாட்டு கலைஞர் கே.காயத்ரி, நாகஸ்வர கலைஞர் எஸ்.ஆர்.ஜி.எஸ்.மோகன்தாஸ், ஹரிகதா கலைஞர் பி.சுசித்ரா மற்றும் கீ போர்டு கலைஞர் கே.சத்ய நாராயணன் ஆகியோர் பெற்றனர்.

விழாவுக்கு பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திரா தலைவர் எல்.சபாரத்தினம் தலைமை வகித்தார். முன்னாள் அட்டர்னி ஜெனரலும், பவன் துணைத் தலைவருமான கே.பராசரன் வாழ்த்துரை வழங்கினார்.

‘தி இந்து’ முதன்மை ஆசிரியரும், பவன் துணைத் தலைவருமான என்.ரவி வரவேற்றுப் பேசினார். நிறைவாக பவன் இயக்குநர் கே.என்.ராமசாமி நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT