தமிழகம்

விதிமீறல்களுக்கு துணைபோகும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்யுங்கள் : மாநகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

செய்திப்பிரிவு

விதிமீறல்களுக்கு துணை போகும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்தால்தான் மற்றவர்களுக்கு பயம் இருக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் தேவராஜ் என்பவர் ஒரு மாடி கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி பெற்றுவிட்டு அதற்கு மேல் பல மாடிகளைக் கட்டினார். அதையடுத்து அந்த கட்டிடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 2012-ல் சீல் வைத்தனர். அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதியை தானே இடித்துவிடுவதாக அவர் உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்ததால், சீல் அகற்றப்பட்டது. ஆனால் தேவராஜ் விதிமுறைகளை மீறி கூடுதலாக 2 மாடிகளை கட்டினார்.

இது தொடர்பாக தேவராஜி்ன் பக்கத்து வீட்டில் வசிக்கும் வடிவேலு என்பவர் மாநகராட்சி ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இந்த விதிமீறலுக்கு துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், கூடுதலாக கட்டப்பட்ட கட்டிடத்தை உடனடியாக இடிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த 2-ம் தேதி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி சார்பில் அரைகுறையாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அடுத்த விசாரணைக்கு மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நடந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் டி.கார்த்திகேயன் நேரில் ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், ‘விதிமுறைகளை மீறி ஒரு கட்டிடம் இருந்தால் அதை இடிப்பதற்கு என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?’ என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “முதலில் ஆவணங்களை ஆய்வு செய்வோம். அதன்பிறகு விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் பணி நிறுத்தத்துக்கான நோட்டீஸ் பிறப்பிப்போம்” என்றார்.

அதற்கு நீதிபதிகள், “அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கை காலதாமதமாகும் என்பது தெரி்ந்தே அதற்குள் இன்னொரு மாடியை சட்டத்துக்கு புறம்பாக எழுப்பி விடுகின்றனர். எனவே ஒரு கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த கட்டிடத்துக்கு பணிநிறுத்த உத்தரவை பிறப்பியுங்கள்” என ஆணையரிடம் தெரிவித்தனர்.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், அந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடி 3 வாரத்துக்குள் முழுமையாக இடிக்கப்படும் என்றார்.

அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாநகராட்சி ஆணையரிடம், ‘‘கடந்த 5 ஆண்டுகளாக சென்னையில் விதிமுறைகள் அளவுக்கு அதிகமாக மீறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தவறு செய்த 7 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். ஆனால் இதுபோல தொடர்ந்து விதிமுறை மீறல்களுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் விதிமீறல்கள் ஓரளவாவது குறையும். தவறு செய்யும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது துணிச்சலாக நடவடிக்கை எடுங்கள். அதற்கு நீதிமன்றம் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். விதிமுறைகளை மீறுபவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளை ஒன்று கட்டாய ஓய்வில் அனுப்புங்கள். இல்லையென்றால் பணி நீக்கம் செய்யுங்கள். அப்போது தான் மற்றவர்களுக்கு பயம் இருக்கும்” என அறிவுறுத்தினர்.

அதன்பிறகு இந்த வழக்கில் வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அந்தக் கட்டிடத்தை இடிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் அக்டோபர் 21-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

SCROLL FOR NEXT