கூடுதல் டிஜிபி சஞ்சீவ்குமார் உடலுக்கு அமைச்சர் ஜெயக்குமார், மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக காவல்துறை தலைமையிட கூடுதல் டிஜிபியாக இருந்த சஞ்சீவ்குமார் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சஞ்சீவ்குமார் லண்டன் சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோயின் தாக்கம் அதிகமானதால் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். திருவல்லிக்கேணி ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் சஞ்சீவ்குமார் வசித்து வந்தார். அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
ஆழ்ந்த இரங்கல்
தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சஞ்சீவ்குமார் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.
டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், கூடுதல் டிஜிபி திரிபாதி, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள் சங்கர், தர், தாமரைக்கண்ணன் உட்பட பல காவல் துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் சஞ்சீவ்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது.