துருக்கியில் நடைபெறவிருந்த பள்ளி ஒலிம்பிக்ஸ் போட்டிக்காக சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 20 மாணவ, மாணவிகள் அங்கு ஏற்பட்ட திடீர் ராணுவக் கிளர்ச்சியில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
அவர்கள் நிலை குறித்து இங்குள்ள அவரது பெற்றோர்கள் பதற்றத்தில் உள்ள நிலையில், அங்கிருந்து பிரியதர்ஷினி சுரேஷ் என்ற சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஒருவர் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
" நாங்கள் அனைவரும் டிராப்சோனில் நிறுவப்பட்டுள்ள விளையாட்டு கிராமத்தில் தங்கியுள்ளோம். காலையில் என் பெற்றோர் தொலைபேசி வாயிலாக எனக்கு தகவல் சொன்னார்கள். அப்போது வெளியே சென்று பார்த்தபோது எல்லாம் இயல்பாகவே இருப்பதுபோல் இருந்தது.
சாலைகள் சற்று வெறிச்சோடியிருந்தன. அதுவும் சிறிது நேரம் கழித்து வழக்கம்போல் எல்லோரும் பரபரப்பாக தங்கள் அலுவல்களுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆனால், துருக்கியில் ராணுவக் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் தங்கியிருக்கும் இடத்தைவிட்டு யாரும் வெளியேற வேண்டாம் என நாங்கள் தங்கியிருக்கும் இடத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கு ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பள்ளி ஒலிம்பிக்ஸ் தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன. அதற்குள் நிலைமை சரியாகிவிடும் என நம்புகிறேன். அவ்வாறு நிலைமை சரியானால் நாங்கள் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற காத்திருக்கிறோம்" என்றார்.
இந்தியர்கள் தவிப்பு: ஹெல்ப்லைன் அறிவிப்பு
துருக்கியில் இந்தியர்கள் பலர் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களுக்காக அங்காரா நகரில் +905303142203, இஸ்தான்புல் நகரில் +905305671095 ஆகிய ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சுஷ்மா வேண்டுகோள்:
துருக்கியில் நிலைமை கட்டுக்குள் வரும் வரை இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவுறுத்தியுள்ளார்.