தாம்பரம் அடுத்த பூந்தண்டலம் பகுதியில் புதிதாக திறக்கவிருந்த டாஸ்மாக் கடை சூறையாடப் பட்டது.
தமிழகம் முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி யுள்ள பகுதிகளில் இருக்கும் மது பானக் கடைகளை மூட உச்ச நீதிமன் றம் உத்தரவிட்டதையடுத்து தமிழகத் தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக் கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக வேறு இடங் களில் மதுக்கடைகளை திறக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்ற னர். குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு ஆங்காங்கே மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரு கின்றனர்.
தாம்பரம் அருகே நெடுஞ்சாலை யில் இருந்த 9 மதுக்கடைகள் மூடப் பட்டன. பெரும்புதூர்-குன்றத்தூர் நெடுஞ்சாலையில் அஞ்சுகம் நகர், புதுப்பேடு பகுதிகளில் இருந்த 2 கடை கள் மூடப்பட்டன. எனவே பூந்தண்ட லம் சக்தி நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கான முயற்சியாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்றது.
பூந்தண்டலம் பகுதியில் ஏற் கெனவே டாஸ்மாக் மதுபானக்கடை இருந்தது. அருகிலேயே வனப் பகுதியும் இருப்பதால் அங்கு கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்கள் நிகழ்ந் தன. எனவே அந்த டாஸ்மாக் கடையை மூட மக்கள் கடுமையாக போராடி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அதை மூடச்செய்தனர்.
தாம்பரம் அடுத்த பூந்தண்டலம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட இருந்தது. இதனை அறிந்த அப்பகுதி பெண்கள் பொங்கியெழுந்தனர். கம்பி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று கட்டிடத்தை முற்றுகையிட்டனர்.
தற்போது மீண்டும் அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க முயற்சி செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து வெகுண்டெழுந்த அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர், நேற்று காலை திறக்கப்பட தயாராக இருந்த கடையை மண்வெட்டி, கடப்பாரை, சுத்தியல் கொண்டு அடித்து நொறுக்கினர்.
உடனடியாக அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த பெண் கள் பெரும்புதூர் - குன்றத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து பெரும்புதூர் டிஎஸ்பி கலையரசன், இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்ட போலீஸார், பேச்சுவார்த்தை நடத்தி அங்கு டாஸ்மாக் கடை திறக்கப்படாது என உறுதியளித்தனர்.
இதனால் சமாதானம் அடைந்த அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது.
வலுவான நிலைச் சட்டத்தை கடப்பாரையால் தகர்க்கும் பெண்கள்.