தாம்பரத்தை அடுத்துள்ள பெருமாட்டுநல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மு.சம்பத் வியாழக்கிழமை காலை 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே உள்ள பெருமாட்டுநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.சம்பத் (45), இவர் பெருமாட்டுநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். தற்போது மதிமுகவின் மாவட்ட இலக்கிய அணி புரவலராக இருந்துவந்தார். இந்த நிலையில் வியாழக்கிழமை காலை வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் மகள் கீர்த்தனாவை டியூஷன் மையத்துக்கு சம்பத் அழைத்துச் சென்றுகொண்டு இருந்தார். பெருமாட்டுநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள வளைவை கடந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் சம்பத்தை வழிமறித்தனர்.
இந்த கும்பல் தன்னை கொலை செய்வதற்கு வந்ததை உணர்ந்த சம்பத் தனது மகள் கீர்த்தனாவை அங்கிருந்து தப்பி ஓடிவிடு என்று சொல்லிவிட்டு, தானும் தப்பி ஓட முயன்றார். ஆனால், அந்த கும்பல் அவரை மடக்கி வீச்சு அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலே சம்பத் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி காவல் துறையினர் சம்பத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைச் சம்பவம் பெருமாட்டுநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. இதனால் அங்கு ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
சாலை மறியல்
சம்பத் கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்கக் கோரி செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை முன்பு மதிமுக கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் ஏராளமானவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மறியலை கைவிட்டனர்.
சம்பத்தின் உடலை பெருமாட்டுநல்லூருக்கு எடுத்து வரும்போது கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் சம்பத்தின் உறவினர்கள் மறியல் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸார் லேசான தடியடி நடத்தியதால் சுமார் 10 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.