மதுரவாயலைச் சேர்ந்தவர் பானுமதி (47). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார். அதில், “வடபழனியில் ‘மனம் ஜூவல்லரி’ என்ற பெயரிலும், அரும்பாக்கத்தில் ‘மனம் மார்க்கெட்டிங்’ என்ற பெயரிலும் நகைக்கடை நடத்தி வந்தவர் நெசப்பாக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்துதாஸ் (57). இவர் தங்களது நகைத் திட்டத்தில் சேர்ந்து ரூ.50 ஆயிரம் கட்டினால் 5 பவுன் நகை தரப்படும் என உறுதி அளித்தார். இந்த திட்டத்தில் மற்றவர்களை சேர்த்துவிட்டால் கமிஷன் தருவதாகக் கூறினார்.
நான் மட்டும் ரூ.16 லட்சத்து 25,000 வசூல் செய்து கொடுத்தேன். என்னைப் போன்றவர்களும் வசூலித்து கொடுத்தனர். ஆனால், கிறிஸ்துதாஸ் நகை ஏதும் கொடுக்காமல், பணத்தையும் திரும்ப செலுத்தாமல் மோசடி செய்துவிட்டார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்த காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி, போலீஸார் நடத்திய விசாரணையில் கிறிஸ்துதாஸ் ரூ.3 கோடி வரை மோசடி செய் திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.