திமுகவில் இருந்து தாம் நிரந்தரமாக நீக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக மு.க.அழகிரி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது:
"திமுகவில் இருந்து என்னை நீக்கியதற்கு ஏதோ ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். இது, திமுக தலைவர் நிர்பந்தத்தின் காரணமாக எடுத்த முடிவு. அவரை மிரட்டியது யார் என்பது எனக்குத் தெரியும்.
கட்சியில் இருந்து என்னை சஸ்பெண்ட் செய்ததற்கு, இதுவரை எந்த நோட்டீஸும் வரவில்லை. கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்காக போராடினேன். என்னை கட்சியில் இருந்தே இப்போது நீக்கிவிட்டார்கள்.
என்னை யார் நீக்கினாலும், நானும் என் ஆதரவாளர்களும் என்றுமே திமுகவினர்தான். அதை யாராலும் மாற்ற முடியாது. அறிவாலயத்தில் எங்களுக்கும் பங்கு உள்ளது. அது, எங்கள் உழைப்பால் கட்டப்பட்டது.
என்னிடம் விளக்கம் கேட்காமல் என் மீது நடவடிக்கை எடுத்தது பற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். என் மீது நடவடிக்கை எடுத்த பொதுச் செயலாளர் (க.அன்பழகன்) மீது வழக்கு தொடருவேன்.
தி.மு.க.வில் இருந்து கொண்டே அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நீங்கள் வைகோவை சந்தித்தது தான் நடவடிக்கைக்கு காரணமா?
வைகோவை சந்தித்தது தப்பா? கலைஞர் கூடத் தான் வைகோவைச் சந்தித்திருக்கார். வீட்டுக்கு வருகிறேன் என்ற வைகோவை, வராதே என்றா சொல்ல முடியும். நான் அவருக்கு (வைகோ) ஆதரவு தருவதாகச் சொல்லவில்லை. இதுவரையில் யாருக்கும் ஆதரவு தருவதாக சொல்லவில்லை.
என்னை வேறு ஏதோ காரணத்துக்காக நீக்கியுள்ளனர். திமுக தலைவர் ஒரு பக்கம் (மு.க.ஸ்டாலின்) மட்டுமே செயல்படுகிறார்.
திமுக சொத்துக்களை அபகரிக்க முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டியிருந்தேன். நான் கூறிய பல்வேறு குற்றச்சாட்டுக்களில் அதுவும் ஒன்று. என்னை சஸ்பெண்ட் செய்த பிறகு நான் நிறைய கேள்விகளைக் கேட்டுவிட்டேன்" என்றார் அழகிரி.
எஸ்ஸார் கோபி உள்ளிட்ட சிலர், உங்களை விட்டு விலகியதாக கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, மு.க.அழகிரி பதிலளிக்க மறுத்துவிட்டார்.
திமுகவில் இருந்து நான் நீக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் என்னை நீக்கியிருக்கிறார்கள்.
எனது குற்றச்சாட்டுகளுக்கும் தி்முக நிச்சயம் பதில் சொல்ல வேண்டும். நான் நீக்கப்பட்டதால் நானும், என்னைச் சேர்ந்தவர்களும் கட்சியில் இருந்து வெளியேறுவோம் என்று அர்த்தம் கிடையாது. இந்த நடவடிக்கையில், எங்களுக்கு திமுக சொந்தமில்லை என்றும் அர்த்தமல்ல.
நான் இதுவரை எந்த மாற்றுக் கட்சியினரையும் ஆதரிக்கவில்லை. நானும் எனது ஆதரவாளர்களும் என்றும் தி்முகவை சேர்ந்தவர்களாகத்தான் இருப்போம்" என்றார் அழகிரி.
இதனிடையே, மு.க.அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவரான எஸ்ஸார் கோபி தனது ஆதரவாளர்களுடன் இன்று திடீரென திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலினை ஆகியோரை சென்னையில் சந்தித்து பேசினார்.
திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்படுவது குறித்த அறிவிப்புக்குப் பின் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. இதையடுத்து, அழகிரி அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக அறிவித்தது.
கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுவதால், அழகிரி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.