கோவையின் நீர்நிலைகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்றி பராமரிக்க அந்தந்த பகுதியில் பொதுமக்களை உள்ளடக்கிய குழுக்களை தன்னார்வலர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள்.
கோவையில் நீர்நிலைகளிலும், பொது இடங்களிலும் பரவிக் கிடக் கும் சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்றும் பணியில் தன்னார்வலர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதன் பயனாக நீர்நிலைகள் ஒவ்வொன்றாக புதுப்பொலிவு பெற்று வருவதோடு, முட்புதர்களில் சிக்கியிருந்த அவற்றின் நீர்வழித்தடங்களும் மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன. பருவமழை தொடங்கும் முன்பாக பெரும்பான்மை நீர்நிலைகளை மீட்டெடுக்க வேண்டுமென்ற நோக்கில் தன்னார்வலர்கள் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பிடும்படியாக வாரவிடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அதிகளவில் கிடைப்பதால் வெட்டி வீழ்த்தப்படும் சீமைக்கருவேல மரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, கெளசிகா நதி மேம்பாட்டுச் சங்கம், அத்திக்கடவு திட்டம் உள்ளிட்ட பல அமைப்புகள் நீர்நிலைகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூர்வாரி பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அடுத்தகட்டமாக அந்தந்தபகுதி மக்களை ஒருங்கிணைத்து குளங்களை பாதுகாக்க அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கூறும்போது, ‘சுமார் 300 ஏக்கர் உள்ள பேரூர் பெரியகுளத்தில் ஒன்றரை மாதமாக சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. அடுத்தபடியாக கடந்த 2 வாரமாக செல்வசிந்தாமணி குளம் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இருந்து அதிகளவில் சீமைக்கருவேல மரங்களும், பிளாஸ்டிக் கழிவுகளும் வெளியேற்றப்பட்டன. குளக்கரையை இங்குள்ள மக்கள் திறந்தவெளிக் கழிப்பிடமாக பயன்படுத்துவதால், அவர்களுக்கு கழிப்பிடம் கட்டிக் கொடுக்க மாநகராட்சியிடம் வலியுறுத்தி உள்ளோம். ஒவ்வொரு குளத்தையும் பாதுகாத்து பராமரிக்க பகுதி மக்களை கொண்டு குழுக்களை உருவாக்கி வருகிறோம். வெள்ளலூர் குளத்தைப் பாதுகாக்க 100 பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி நேற்று முதல் குளத்தை சுத்தப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது’ என்றனர்.
கெளசிகா நதியை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒருபகுதியாக சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் அசோசியேசன் ஒத்துழைப்புடன் 47 பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு கோயில்பாளையம் முதல் கோட்டைப்பாளையம் வரை கெளசிகா நதியில் இருந்த சீமைக் கருவேல மரங்கள் நேற்று அகற்றப்பட்டன.
கெளசிகா நதி மேம்பாட்டு சங்கத்தினர் கூறும்போது, ‘200 அடி அகலத்தில் இருந்த நதி, சீமைக்கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட பிறகு 300 அடி அகலத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. நதியை ஆக்கிரமித்துள்ள நச்சு மரங்களை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் முழுவதுமாக வெட்டி அகற்ற முயன்று வருகிறோம்’ என்றனர்.
இதேபோல, கோவை மாநகரக் காவல்துறையைச் சேர்ந்த போலீஸ் குழுவினரும் தன்னார்வ அடிப்படையில் நேற்று நரசாம்பதி குளத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்ற களம் இறங்கினர். 20-க்கும் மேற்பட்ட போலீஸார், குழுவாக இணைந்து குளத்தை ஆக்கிரமித்திருந்த தேவையற்ற முட்புதர்களை வெட்டி சுத்தப்படுத்தினர். போலீஸார் செயல்பாட்டுக்கு அப்பகுதி மக்களும் ஆதரவு தெரிவித்து உடன் பங்கேற்றனர்.