தமிழகம்

முள்ளிவாய்க்கால் முற்றச்சுவர் இடிப்பு: ஜெ. மீது வைகோ சாடல்

செய்திப்பிரிவு

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்குள் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலர் வைகோ, முதல்வர் ஜெயலலிதா சர்வாதிகாரியாக மாறிவருவதாக சாடினார்.

தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச்சுவர், பூங்கா இடிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த மதிமுக பொதுச் செயலர் வைகோவை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.

இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தினுள் நுழைந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இந்த முற்றத்தின் முன்பிருந்த நீரூற்றும் பூங்காவும் இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளது. ராஜபக்சே அரசுக்கும் ஜெயலலிதா அரசுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

ஈழத்தமிழர்களுக்காக சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டுவிட்டு, இங்கே அவர்களின் நினைவிடத்தை இடிக்க நினைக்கிறார். மக்களை இனியும் முட்டாள்களாக்க முடியாது. நான் எல்லாவற்றுக்கும் தயாராகத்தான் வந்துள்ளேன். அனுமதி வாங்கி, 3 ஆண்டு உழைப்பில் உருவான பூங்கா இது.

பூங்கா இடிக்கப்பட்டது திட்டமிட்ட கொடிய செயல். இதனை இடிக்க மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் விடுமுறை என்றபோதும் நீதிபதி சிங்கிவியின் வீட்டுக்கேச் சென்று இதனை இடிக்க வேண்டும் என மனு செய்தனர். இப்போது ஒன்றும் அவசரமல்ல, டிசம்பரில் விசாரிக்கலாம் என்று நீதிபதி மனுவை கிடப்பில் போட்டுவிட்டார்.

படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்காகவும் தீக்குளித்து இறந்தவர்களுக்காகவும் கட்டப்பட்ட இந்த நினைவிடத்தைத் திறக்க 6 மாதத்துக்கு முன்பே ஜெயலலிதாவுக்கு நெடுமாறன் கடிதம் எழுதினார். பதில் இல்லை. தா.பாண்டியன் மூலம் முயற்சித்துப் பார்த்தும் எதுவும் பதில் இல்லாததால், நெடுமாறனே திறந்துவைப்பது என்று முடிவானது.

அதன்பிறகு, இந்த நினைவு முற்றத்தைத் திறக்கவிடாமல் செய்வதற்கு ஜெயலலிதா அரசு செய்த இடையூறுகள் கொஞ்மல்ல. ஜெயலலிதா ஒரு பாசிஸ்ட், காட்டாட்சி நடத்துகிறார், சர்வாதிகாரியாக மாறிவருகிறார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன்.

பிரபாகரன் படத்தை வைத்தார்கள் என்று நெடுமாறன் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு போட்டுள்ளார். தமிழகத்தின் கோடிக்கணக்கான மக்களின் மனதில் பிரபாகரன் உள்ளார். அதனால், அவர்களையும் அழித்துவிடுவாரா?

இதை இடிப்பதற்கு எப்படி மனம் வந்தது. இது தமிழனின் சொத்து. யாரும் இதைத் தடுக்கவோ, உடைக்கவோ முடியாது. தமிழ்நாட்டில் கேள்வி கேட்க ஆள் இல்லை என்று நினைக்கிறார். நாங்கள் எதற்கும் தயாராகவே இருக்கிறோம்.

அங்கு ராஜபக்சே தமிழர்களின் கல்லறைகள், போராளிகளின் துயலங்கங்களை இடித்து வருகிறார். அதே போல இங்கும் செயல்படுவது கொடுமையான செயல்.

தமிழகத்தில் எத்தனை நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஏன், டான்சி நிலமே ஆக்கிரமிப்புதானே. இதன் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. முறையாக மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுத் தொடங்கப்பட்ட இடத்தை இடிப்பது சரியா என்பதை மக்களே முடிவு செய்யட்டும்" என்றார் வைகோ.

SCROLL FOR NEXT