தமிழக சட்டப்பேரவையில் நியமன எம்எல்ஏவாக மருத்துவர் நான்சி ஆன் சிந்தியா பதவியேற்றுக் கொண்டார். ஆங்கிலோ இந்தியர்களின் பிரநிதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பின்போது சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீனும் இருந்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. தமிழகத்தின் 20-வது முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுள்ளார். சட்டப்பேரவையில் ஆங்கிலோ - இந்தியன் பிரிவைச் சேர்ந்த ஒருவர் நியமன உறுப்பினராக நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி, நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸை சட்டப்பேரவையின் 235-வது உறுப்பினராக நியமித்து ஆளுநர் கே.ரோசய்யா கடந்த 30-ம் தேதி உத்தரவிட்டார்.
அகில இந்திய ஆங்கிலோ இந்தியன் சங்க மதுரை கிளையின் தலைவராக உள்ள நான்சி, 1955-ம் ஆண்டு பிறந்தவர். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் ஆலப்புழை ஆகும். எம்பிபிஎஸ் படித்து மருத்துவராகப் பணியாற்றி வரும் நான்சி, கடந்த 14-வது சட்டப்பேரவையிலும் நியமன உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.