தமிழ்நாடு முழுவதும் சட்ட விரோதமான முறையில் செயல் பட்டு வரும் 252 குடிநீர் உற்பத்தி நிறுவனங்களை உடனடியாக மூடுமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி செயல் படும் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்பான ஒரு செய்தி ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாகவே முன்வந்து வழக்காக எடுத்தது.
இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி எம்.சொக்கலிங்கம், தொழில்நுட்ப உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநில அரசின் பொதுப்பணித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது சலீம், தடையில்லாச் சான்றிதழ் கோரி 855 குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் விண்ணப்பங்களை அளித்தன. நிலத்தடி நீர் மிக அதிகமாக உறிஞ்சப்படும் பகுதிகளில் அனுமதி வேண்டி 252 நிறுவனங்களும், ஓரளவு பாதிப்புள்ள பகுதிகளில் அனுமதி வேண்டி 570 நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளன.
நிலத்தடி நீர் மிக அதிகமாக உறிஞ்சப்படும் பகுதிகளில் அனுமதி கோரும் நிறுவனங்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்க இயலாது என்று அவர் தீர்ப்பாயத்தில் தெரிவித்தார்.
உரிய தடையில்லாச் சான்றிதழ் பெறும் வரை அந்த நிறுவனங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தீர்ப்பாய நீதிபதிகள் உத்தர விட்டனர். மற்ற 570 நிறுவனங் களின் விண்ணப்பங்களை பரிசீலிக்குமாறும், அதுவரை குடிநீர் வணிகம் மேற்கொள்ள அந்த நிறுவனங்களை அனுமதிக்குமாறும் பொதுப்பணித் துறைக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.