தமிழகம்

சென்னையில் போரூர் - வடபழனி, வண்டலூர் - வேளச்சேரி வழித் தடங்களில் மோனோ ரயில்: சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

போரூர் முதல் வடபழனி வரை, வண்டலூர் முதல் வேளச்சேரி வரை 43.48 கி.மீ. தூரத்துக்கு ரூ. 6 ஆயிரத்து 402 கோடியே 63 லட்சத்தில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று அவர் தாக்கல் செய்த போக்குவரத்துத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது:

சென்னை மாநகரில் பல்வேறு வகை போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளன. மாநகரில் 27 சதவீத மக்கள் மட்டுமே பொது போக்குவரத்து வசதிகளைப் பன்படுத்துகின்றனர். இதனை வரும் 2026-ம் ஆண்டில் 46 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.

எனவே, சென்னை மாநகரில் தற்போதுள்ள மற்றும் வரவிருக்கின்ற போக்குவரத்து வசதிகளுடன் ஒருங்கிணைத்து மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

போரூர் முதல் வடபழனி வரை

பூந்தமல்லி முதல் கத்திப்பாரா வரை இணைப்புடன் போரூரிலிருந்து வடபழனி வரை 20.68 கி.மீ. தூரத்துக்கு மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். தனியார் பங்களிப்புடன் ரூ. 3 ஆயிரத்து 267 கோடி திட்ட மதிப்பில் வடிவமைத்து, நிதி திரட்டி, கட்டமைத்து, ஒப்படைக்கும அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

வண்டலூர் முதல் வேளச்சேரி வரை

வண்டலூர் முதல் வேளச்சேரி வரை 22.80 கீ.மீ. தூரத்துக்கு ரூ. 3 ஆயிரத்து 135 கோடியே 63 லட்சம் திட்ட மதிப்பில் பன்னாட்டு நிதி உதவியுடன் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT