தமிழகத்தில் மழை இல்லாததால் தேங்காய் விளைச்சல் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனால், சந்தைகளுக்கு வரும் தரமில்லாத சிறுத்துப்போன தேங்காய்களுக்குக்கூட அதிகவிலை கிடைக்கிறது.
தினமும் அன்றாட உணவில் சேர்த்து கொள்ளக்கூடிய முக்கிய உணவுப் பொருள் தேங்காய் என்பதால், சந்தையில் அவை அதிக அளவில் விற்பனை யாகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 60 சதவீதம் தேங்காய் ஆனது உண்பதற்காகவும், 3.5 சதவீதம் தேங்காய்கள் விழாக்களுக்காகவும் பயன் படுத்தப்படுகிறது. இந்தியாவில் கோவா, கர்நாடகத்தின் மேற்கு பகுதி, கேரளம், தமிழகத்தில் தேங்காய் உற்பத்தி அதிகளவு நடைபெறுகிறது. சர்வதேச நாடு களை பொறுத்தவரையில் இலங்கை, தாய்லாந்து, பர்மா, வியட்நாம் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகளவு உற்பத்தியாகிறது.
இங்கு விளையும் தேங்காயின் அளவு பெரியதாகவும், பருப்பின் அடர்த்தி அதிகமாகவும், அதிகளவு நீர் கொள்ளளவு கொண்டதாகவும் இருக்கும். இந்தியாவில் விளையும் தேங்காய் நடுத்தர அளவில் இருந்தாலும், தேங்காய் மற்றும் இளநீரின் அளவு குறைந்து இருந்தாலும் அதன் சுவையும், இனிப்பும், வைட்டமின் சத்துக்களும் அதிகமாக இருக்கும். அதனால், இந்த தேங்காய்களை கொண்டு தயாரிக்கும் உணவுப் பொருட்களும் சுவையாக இரு க்கும். பொதுவாக தென்னை மரத் துக்கு தினசரி 80 முதல் 120 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். தற்போது வறட்சியால் தென்னை மரங்களுக்கு இந்த தண்ணீர் கிடைக்கவில்லை.
அதனால், 2010 முதல் 2014-ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்தில் 1, 950 ஏக்கர் வரையிலான நிலப்பரப்பில் இருந்த தென்னை மரங்கள் காய்ந்துபோயின. தற்போது இருக்கும் தென்னை மரங்களில் எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சல் இல்லை. தேங்காய் சிறுத்துப்போய் பருப்புகள் அடர்த்தி குறைந்து காணப்படுகின்றன.
உயர்ந்துவரும் விலை
விளைச்சல் குறைவால் தேங்காய்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அவை தர மில்லாவிட்டாலும் சந்தைகளில் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சிறிய அளவிலான தேங்காயே ரூ.15 முதல் ரூ.18 வரை சந்தைகளில் விற்கப்படுகிறது. பெரிய தேங்காய்கள் சந்தைகளுக்கு வருவது அபூர்வமாகிவிட்டது.
இதுகுறித்து அழகர் கோவிலை சேர்ந்த விவசாயி மகேந்திரன் கூறியது: அதிக காய்ப்பு இல்லை. மழையும் இல்லை. எவ்வளவுதான் விலைக்கு வாங்கியும், ஆழ்துளை கிணறு தண்ணீரை பாசனம் செய்தாலும் மேல்மழை பெய்தால் மட்டுமே தேங்காய் விளைச்சல் அதிகரிக்கும். பருப்பும் பெருக்கும். தற்போது தென்னை மரங்களை காப்பாற்றுவதே பெரும் பாடாக இருக்கிறது என்றார்.
வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
மேற்கு தொடர்ச்சிமலையில் மேற்கு மற்றும் கிழக்கு சரிவுகளில் காணப்படும் செம்மண் சரளைப்பகுதியில் இந்த மரம் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது. தினமும் அதிகளவு தண்ணீர் தேவை உள்ள மரமாகும். களிமண் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள தென்னைக்கு தினசரி 50 லிட்டர் முதல் 65 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளாக கோவா, கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தில் மிகக் குறைந்த மழைப்பொழிவே கிடைத்துள்ளது. அதனால், தினமும் தண்ணீர் தேவையை தென்னை மரங்களுக்கு முறையாக விவசாயிகளால் கொடுக்க முடியவில்லை.
பாசன இடைவெளி 5 நாட்களுக்கு மேல் அதிகரித்ததால் தற்போது பெய்த மழை தென்னை மரத்தின் மேல்பகுதியில் நனைக்கக்கூடிய அளவுக்குக்கூட பெய்யவில்லை. அதனால், தென்னையின் பருப்பு மிகவும் சிறுத்துப்போய் அதன் தடிமனும் சுவையும் குறைந்துவிட்டது. உள்ளிருக்கும் நீரின் அளவும் குறைந்துவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விளைச்சல் அதிகம் கிடைக்க என்ன செய்யலாம்?
பிரிட்டோ ராஜ் மேலும் கூறியது: முறையான மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை தென்னை வளரும் மலைசரிவுப் பகுதியில் அதிகளவு அமைக்க வேண்டும். பண்ணைக்குட்டைகள், மழைநீர் சேகரிக்கும் அகழிகளை மலை சரிவின் குறுக்கே அமைப்பதால் எதிர்காலங்களில் தென்னையின் வளத்தை நிலைப்படுத்தலாம். வெறும் தண்ணீர் மட்டுமே தென்னையின் வளர்ச்சிக்கு பயனில்லாத நேரத்தில் அந்த பாசன நீருடன் தென்னைக்கு தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து கொண்ட இடுபொருட்களையும், பல்வேறு வகையான நுண்ணுயிரிகளையும் வேருக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் பாசன நீரினால் ஏற்படும் ஈரப்பதம் மண்ணில் உள்ள சத்துகளை கரைத்து நுண்ணுயிரிகள் மூலமாக தென்னையின் சல்லி வேர்களுக்கு முறையாக கொடுக்க உதவும். குறைந்தளவு மழை அளவை சேகரிக்க பல்வேறு வகையான மழைநீர் சேகரிப்புகள் அமைப்பதால் தென்னை மரங்களை அதிகளவு பட்டுப்போவதை தடுப்பதுடன் தென்னையின் வளர்ச்சி தடையில்லாமல் இருக்க உதவும் என்றார்