வரும் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 21-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேமுதிக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்பும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், கட்சி தொண்டர்கள் என அனைவரும் வரும் 21-ம் தேதி காலை 10 மணி முதல் அதற்குரிய விண்ணப்பங்களை கொடுக்கலாம். வரும் 30-ம் தேதி மாலை 5 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும்.
சென்னை மாநகராட்சி, மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் தலைமை கழகத்தில் வழங்கப்படும். பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட கழக அலுவலகங்களில் உரிய பொறுப்பாளர்களிடம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ.3 ஆயிரம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.3 ஆயிரம், ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு ஆயிரம், நகராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு ஆயிரம், பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ.500 என கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.
வேலூர் மத்தியம், கிழக்கு, மேற்கு மாவட்டங்களுக்கு ஏ.ஆர். இளங்கோவன், சென்னை வடக்கு, மத்தியம், தெற்கு, மேற்கு - எல்.கே.சுதீஷ் , மீஞ்சூர் சேகர், திருவண்ணாமலை வடக்கு, தெற்கு- வெங்கடேசன், திருச்சி மாநகர், தெற்கு- செல்வ.அன்புராஜ், தூத்துக்குடி வடக்கு, தெற்கு-முருகநாதன், செல்வ ராஜ் உட்பட மொத்தம் 38 பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட பொறுப்பாளர்களிடம் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.