தமிழகம்

"அம்மா"வையே நினைத்து கொண்டிருந்தால் ஆட்சிச் சக்கரம் சுழலாது- கருணாநிதி

செய்திப்பிரிவு

மக்கள் நலனைக் பாதுகாத்திட தமிழக அரசு இயங்க முன் வரவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடித வடிவ அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியாகக் குறைக்கக் கோரி, மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய தீர்மானித் திருப்பதாக, கேரள அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் திரு.பி.ஜே. ஜோசப் கூறியிருக்கிறார். முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை142 அடியாக உயர்த்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு அனுமதியளித்து உத்தரவிட் டுள்ளது. அதையடுத்து நீர் மட்டத்தை உயர்த்து வதற்கான நல்வாய்ப்பு தமிழக அரசுக்குக் கிட்டியுள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாகவே முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டமானது, விரைவாக உயர்ந்து வருகிறது. சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் அணையின் நீர் மட்டம், 5-11-2014 நிலவரப்படி 138 அடியை எட்டியுள்ளது.

அணையின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால், அணைப் பகுதியிலே உள்ள மக்க ளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அந்த மக்களின் பாதுகாப்பைக் கருதி, நீர் மட்டத்தை 136 அடியாகக் குறைக்க வேண்டும் என்றும் கேரள அதிகாரிகள் உச்ச நீதிமன்றக் குழுவிடம் கோரி னார்கள். ஆனால் கேரளாவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றக் குழு ஏற்கவில்லை.

எனவே 5-11-2014 அன்று திருவனந்தபுரத்தில் கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர், பி.ஜே. ஜோசப் அவர்களின் தலைமையில் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டம் முடிந்த பிறகு தான், அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 138.10 அடியைத் தாண்டியுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளார்கள். எனவே நீர் மட்டத்தை 136 அடியாகக் குறைக்க வேண்டுமென்று 7ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளோம். 11ஆம் தேதிக்குள் விசாரணை தொடங்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்திலே கேட்கவிருக்கிறோம்” என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

இந்தச் செய்தியை ஏடுகளில் கண்டதும், முல்லைப் பெரியாறு பிரச்சினையில் அதிக அக்கறை காட்டி வரும் கம்பம் தொகுதி சட்டப் பேரவை கழக உறுப்பினர் கம்பம் நா. இராம கிருஷ்ணனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முல்லைப் பெரியாறு பற்றித் தற்போதைய உண்மை நிலைமைகளை அறிந்து கூறுமாறு கேட்டுக் கொண்டேன். அவர் சில செய்திகளைத் தெரிவித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்துதான் இந்த மடலை எழுதுகிறேன்.

முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் தனித்தனியாக வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நேரத்தில், தி.மு. கழக ஆட்சியில்தான் இதனை ஒரே வழக்காக விசாரித்திட 14-2-1998 அன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. அந்த மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்றம், 1-2-1999இல் இந்த வழக்குத் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் உயர் நீதிமன்றங்களிலே தடை செய்ததோடு, இந்த வழக்கினை உச்ச நீதிமன்றத்திற்கு மாறுதல் செய்ய ஆணை பிறப்பித்தது.

உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்த பின்னர் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு மத்திய அரசை வலியுறுத்தியது. அதற்கிணங்க மத்திய நீர் வளத் துறை அமைச்சர், தமிழகம் மற்றும் கேரள மாநிலங் களின் முதல் அமைச்சர்களை நேரடியாகப் பேச்சு வார்த்தை நடத்துமாறு கோரினார். 5-4-2000 அன்று திருவனந்தபுரத்திலும், 19-5-2000 அன்று புதுடெல்லி யிலும் பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும், கேரள அரசின் பிடிவாதப் போக்கினால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதனை அடுத்து உச்ச நீதிமன்றம் நிபுணர் குழு ஒன்றை அமைத்திட ஆணைபிறப்பித்தது. அதன்படி, மத்திய நீர்வள அமைச்சகம், டாக்டர் மிட்டல் தலைமையில், கே.எஸ். கான்பூர், டாக்டர் ஆர்.எஸ்.வார்ஸ்னே, ஜெ.கே.திவாரி, ஏ.கே. காஞ்சூ, ஏ.மோகனகிருஷ்ணன், எம்.கே.பரமேஸ் வரன் நாயர் ஆகியோரைக் கொண்ட குழுவினை அமைத்தது. அந்த நிபுணர்கள் குழு 10-10-2000 மற்றும் 11-10-2000 ஆகிய நாள்களில் முல்லைப் பெரியாறு அணையை விரிவாக ஆய்வு செய்தது.

மிட்டல் தலைமையிலான ஆய்வுக் குழுவானது, முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த பின்னர், அதன் துணை அணையான பேபி அணையையும் ஆய்வு செய்ய எண்ணியது. பேபி அணையைஆய்வு செய்திட திரு. பிரார் தலைமை யிலான குழு 20-11-2000 முதல் 25-11-2000 வரை பல ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த இரு ஆய்வுக் குழுவினரும் தங்களது இறுதி ஆய்வு அறிக்கை யினை 30-8-2001 அன்று மத்திய நீர்வள அமைச்சகத்திடம் தாக்கல் செய்தனர். அந்த ஆய்வு அறிக்கையில் பேபி அணையைப் பலப்படுத்தும் பணி முடிவடையும் வரை, பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கவும், பின்னர் அந்தப் பணி முடிவடைந்தவுடன் 152 அடி வரை நீரைத் தேக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

கழக ஆட்சியில் தொடரப்பட்ட முல்லைப் பெரியாறு அணை வழக்கின், வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு 27-2-2006 அன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. சபர்வால் தலைமையிலான அமர்வினால் வழங்கப்பட்டது. அதில் முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாகவும், அணை யில் 142 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்றும், எஞ்சியிருக்கும் பலப்படுத்தும் பணிகள் முடிவடைந்தவுடன் மேலும் ஒரு குழு அமைத்து, அணையின் நீர் மட்டத்தை அதன் நிறை மட்டமாகிய 152 அடிக்கு உயர்த்திட ஆவன செய்யலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் தீர்ப்பு வெளியான அன்றையதினம் ஆட்சியிலே இருந்த அ.தி.மு.க. அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையேற்று, தமிழ்நாட்டின் உரிமையை உடனடியாக நிலைநாட்டிட, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கும் வகையில் அணையின் வெளிப்போக்கிகளை (ஷட்டர்) இறக்க வில்லை. இதுபற்றிச் சட்டப்பேரவையில், உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை ஏன் உடனடியாக நடைமுறைப் படுத்தவில்லை என்று அரசைக் கேட்டபோது, அணையில் போதுமான நீர் இல்லை என்றும், கோடைக் காலமாக இருப்பதால் மழை இன்றி நீர்வரத்து முழுமையாகக் குறைந்து விட்டது என்றும், அன்றைக்கு முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா கூறினார்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, கேரள மாநில அரசு, ஓர் அவசரச் சட்டத் திருத்த மசோதாவினைத் தாக்கல் செய்து, முல்லைப் பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீரைத் தேக்கக்கூடாது என்று நிறைவேற்றியது. மேலும் கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை உட்படஅனைத்து அணைகளையும் பராமரிக்கவும், தேவை ஏற்பட்டால் புதிய அணை கட்டிக் கொள்ளவும் கேரள அரசுக்கு உரிமை உள்ளது என்று தீர்மானமும் கேரளச் சட்டப்பேரவையிலே நிறைவேற்றிக் கொண்டார்கள்.

தமிழகத்திற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை ஜெயலலிதா அரசு உடனடியாக அமல்படுத்தாத காரணத்தினால், 142 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளும் அந்த உரிமையை அப்போது இழக்க நேரிட்டது. இதற்குப் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் நேரடிப் பார்வையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு இறுதியாக முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்ற இறுதித் தீர்ப்பு 7-5-2014 அன்று கிடைத்தது.

இந்த நிலையில்தான் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதாக செய்தி வந்துள்ளது. எனவே நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றம் நமக்கு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் 142 அடி நீரைத் தேக்குவதற் கான வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வதற்கான தக்க நேரம் கனிந்துள்ளது.

ஆனால் 5-11-2014 வரை 456 கன அடி நீரைக் குடிநீருக்காக வெளியேற்றி வந்ததற்கு மாறாக, அந்த அளவை அதிகப்படுத்தி 6-11-2014 அன்று 1,816 கன அடி நீரை உடனடியாக வெளியேற்றுவதன் காரணம் என்ன? நீர்வரத்து 1973 கன அடியாக இருக்கின்ற நேரத்தில் தண்ணீரை அதிகப்படியாக வெளியேற்று வது, இந்த அரசுக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த விருப்பமில்லையோ என்று அந்தப் பகுதியிலே வாழும் விவசாயிகள் மற்றும் அங்கேயுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் எண்ணுகிறார்களாம். குறிப்பாக அந்தப் பகுதியிலே உள்ள தமிழக விவசாயிகள், “முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கட்டப் பட்டுள்ள, ஆக்கிரமிப்பு கட்டடங்களைப் பாதுகாக் கவே உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடரும் நாடகத்தை அரங்கேற்றுகிறது, இதில் வேறு எந்த மர்மமும் இல்லை” என்று கூறியுள்ளனர். மிக முக்கியமாக விவசாயம் மற்றும் குடிநீர்த் தொடர் பான இந்தப் பிரச்சினை பற்றி அ.தி.மு.க. அரசின் சார்பில் எவ்வித விளக்கமும் இதுவரை வரவில்லை.

கழக ஆட்சிக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்து வழக்குத்தொடுத்து, அந்த வழக்கினால் தமிழக மக்களுக்கு நியாயம் கிடைத்த உண்மை வரலாற்றையே மறைத்து, அ.தி.மு.க.வினர் அவர்களாகவே தங்களுக்குத் தாங்களே மதுரையில் பாராட்டு விழா நடத்திக் கொண்டதையும், முல்லைப் பெரியாறு பிரச்சினைக் காகக் குரல் கொடுத்தவர்களையும், போராடியவர் களையும் அழைக்காமலே அந்த விழா நடத்தப்பட்டது பற்றி அப்போதே எள்ளி நகையாடப்பட்டதையும் தமிழகம் இன்னும் மறக்கவில்லை. மேலும் தற்போது முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிறைவேற்றப்பட்டால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பினாமி முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத் திற்குப் பெயர் வந்துவிடுமோ என்று ஜெயலலிதா கருதுகிறாரோ என்ற சந்தேகம்தான் அந்தப் பகுதி மக்களிடையே தற்போது ஏற்பட்டுள்ளதாம்.

தொடர் மழை காரணமாக எல்லா குளங்களும் நிரம்பி, எல்லா நிலங்களிலும் ஈரப்பதம் மிகுந்துள்ள நேரத்தில், தேவையில்லாமல் அணையிலிருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றுவதன் மூலம், 142 அடிவரை நீரைத் தேக்கும் வாய்ப்பினைத் தமிழகம் இழக்க நேரிடும் நிலை உள்ளது. எனவே உடனடியாக குடிநீர்த் தேவைக்காக மட்டும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீரைத் திறந்து விட்டு, அணையை வந்தடைகின்ற நீரை முழுவதுமாகச் சேமித்து, கழக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கின் மீது உச்ச நீதிமன்றம் இறுதியாக அளித்த தீர்ப்பினை நிலைநாட்டி விவசாயிகளின் நீண்ட கால விருப்பத்தை நிறைவேற்றிடத் தமிழக அரசு முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி மதுரையில் நடை பெற்ற பாராட்டு விழாவில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடி வரை உயர்த்து வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்தார். அதற்காக இதுவரை என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம். ஏனெனில் கேரள அரசு முல்லைப் பெரியாறு நீர் மட்டத்தினை136 அடியாகக் குறைக்கக்கோரி உச்ச நீதிமன்றத் தில் கோரிக்கை வைக்கப்போவதாக அறிவித்திருக்கின்ற நேரத்தில், 142 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை நிலைநாட்டிக் கொள்ள முன்வர வேண்டுமென்பது அவசர அவசியமான தேவை. கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதால், தமிழக அரசு “கேவியட்” மனு தாக்கல் செய்ய வேண்டு மென்று தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பொறி யாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல், இந்த உண்மையைப் புரிந்து கொண்டு, மூத்தப் பொறி யாளர்கள் மோகனகிருஷ்ணன், சுப்ரமணியம் போன்றவர்களின் ஆலோசனைகளையும் பெற்று, எப்போதும் போல நமக்கென்ன என்று இருக்காமல், இப்போதாவது சற்றுச் சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்.

மேலும், திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் ஒரு இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயி கள் பயனடைந்து வருகிறார்கள். அமராவதி ஆற்றின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 26 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் மூலம் 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்திலிருந்து வரும் பாம்பாறு, வால்பாறை வழியாக வரும் சின்னாறு, கொடைக்கானல் பகுதியிலிருந்து வரும் தேனாறு ஆகிய 3 நதிகள் தான் அமராவதி அணைக்கு முக்கிய நீர் ஆதாரம். இதில் பாம்பாற்றின் பங்குதான் அதிகம். இந்த நிலையில் கேரள முதலமைச்சர், காணொலி வாயிலாக பாம்பாற்றின் குறுக்கே பட்டிசேரி அணைத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், அந்தப் பகுதியிலே உள்ள தமிழக விவசாயிகளைத்தான் பெரிதும் பாதிக்கும்.

காவிரி ஒப்பந்த அடிப்படையில், காவிரியின் கிளை நதிகளில் ஒன்றான அமராவதிக்கு வரும் தண்ணீரைத் தடுக்கவும், அதில் அணை கட்டவும் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காவிரி தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திலே விசாரணையில் உள்ளது. கேரள அரசு தொடங்கும் திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச் சூழல், மின்சார வாரியம், வனத்துறை, காவிரி நடுவர் மன்றம் என்று யாரிடமும் எவ்வித அனுமதியும் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே கேரள அரசின் இந்த முயற்சியைத் தடுக்க தமிழக அரசு, மத்திய அரசின் மூலமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனநாயக அமைப்பில் தேர்தலில் போட்டியிட்டு யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம், போகலாம், ஆனால் அரசு நிலையானது. அது தேங்காமல் இயங்க வேண்டும். “அம்மா”வையே நினைத்து கொண்டிருந்தால் ஆட்சிச் சக்கரம் சுழலாது. எனவே மக்கள் நலனைப் பாதுகாத்திடத் தமிழக அரசு இயங்க முன்வர வேண்டும். அதை விட்டு இப்போதைய நிலையே நீடித்தால், அதனால் விளையும் எல்லா தவறுகளையும், பாதிப்புகளையும் களைவது பெருந்துன்பமாகி விடும். எனவே மாநில மக்களுக்கான ஆட்சி இயங்க முன்வரட்டும்; இடர்ப்பாடுகளைக் களையட்டும்.

இவ்வாறு தனது கடித வடிவ அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT