தமிழகம்

புரசை மேம்பாலம் கீழே பஸ்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி

செய்திப்பிரிவு

சென்னை புரசைவாக்கம் டவுட்டனில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பஸ்கள் நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பஸ் பயணிகளும், வாகன ஓட்டிகளும் தினமும் அவதிப்படுகின்றனர்.

தி.நகருக்கு அடுத்து புரசைவாக்கத்தில் தான் அதிகளவில் பெரிய, பெரிய ஜவுளி மற்றும் நகைக் கடைகள் உள்ளன. சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இதனால் குறிப்பாக புரசைவாக்கம் டவுட்டன் அருகே போக்குவரத்து நெரிசலாக இருந்தது. அதனால், இந்த பகுதியில் பாலம் கட்டப்பட்டது. இது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

ஆனால், இப்போது வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், போக்குவரத்து நெரிசல் மீண்டும் தலை தூக்கியுள்ளது. பாலத்தின் தொடக்கத்தில், கீழே பஸ்கள் நிறுத்துவதால், தான் நெரிசல் அதிகமாக இருக்கிறது. கார்களையும், ஆட்டோக்களையும் பெரிய, பெரிய கடைகளுக்கு முன்பாக நிறுத்தி வைப்பதால், வாகனங்கள் சிக்னல் வரையில் நீண்டதூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. எனவே, பாலத்தை அடுத்து பஸ்களை நிறுத்தினால், போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என அப்பகுதி வழியாக வந்த வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

இது குறித்து சந்திரசேகர், ஸ்டாலின், பாக்யராஜ் ஆகியோர்

கூறுகையில், ‘‘இந்த பாலம் தொடங்கும் இடத்தின் கீழ் பகுதிகளில் பஸ்கள் நிறுத்துவதால்,நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு நிற்கின்றன. இதனால், பஸ் பயணிகளுக்கும், மற்ற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருக்கிறது. எனவே, பஸ் நிறுத்தத்தை கொஞ்சம் தூரத்திற்கு தள்ளி மாற்றியமைக்கலாம். இதனால், போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும்’’ என்றனர்.

இது குறித்து மாநகர போக்குவரத்து உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘இந்த இடத்தில் பஸ்கள் நிறுத்த வேண்டுமென அதிகமான மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதால் தான் அங்கு பஸ்கள் நிறுத்தப்படுகின்றன’’ என்றனர்.

SCROLL FOR NEXT