தமிழகம்

ஷேல் காஸ் வழக்கு முடித்துவைப்பு: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

செய்திப்பிரிவு

ஷேல் காஸ் எடுப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முடித்து வைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஷேல் காஸ் தொடர்பாக காவிரி பாசனக் குத்தகை விவசாயிகள் சங்கத் தலைவர் முருகன், காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ‘காவிரி டெல்டா பகுதியில் பாறைப்படிம எரிவாயு (ஷேல் காஸ்) எடுக்க மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு, தீர்ப்பாய உறுப்பினர்கள் நீதிபதி பி.ஜோதி மணி, பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மதிமுக பொதுச்செய லாளர் வைகோ, வழக்கறிஞர் சிவ.ராஜசேகரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். வைகோ வாதிடும்போது, ‘‘காவிரி டெல்டா வில் குத்தாலம் பகுதியில் ஷேல் காஸ் எடுப்பதற்கு மத்திய அரசிடம் விண்ணப்பம் கொடுக்கப் பட்டுள்ளது. முன்பு மீத்தேன் எரிவாயு திட்டத்துக்கு உரிமம் வழங்கியதுபோல், இத்திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பு மாநில அரசு நிபுணர் குழு அமைத்து தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இ.மனோகரன், ‘‘மத் திய அரசு இத்திட்டத்தை அனு மதித்த பிறகுதான் இதுபற்றி பரிசீலிக்க முடியும்’’ என்று கூறினார்.

நிபுணர் குழு

இதையடுத்து, ‘‘ஷேல் காஸ் விவகாரத்தில் நிபுணர் குழு அமைப்பது குறித்து முன்பு பரிசீலிப்பதாக கூறிய தமிழக அரசு, தற்போது திட்டம் அறிவிக்கப் பட்டால்தான் பரிசீலிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. எனவே, அதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டால் தீர்ப்பாயத்தை மனுதாரர் அணுக லாம்’’ என்று கூறிய தீர்ப்பாய உறுப்பினர்கள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT