தமிழகம்

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: சென்னையில் நாளை வைகோ ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முகப்பு இடிக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் நாளை (சனிக்கிழமை) வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக அறிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நன்மாறன் வெளியிட்டுள்ள செய்தியில், தஞ்சையில் நிறுவப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் முகப்பு இடிப்பைக் கண்டித்து, சென்னையில் நாளை மதிமுக சார்பில் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை துறைமுகம் எதிரில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாளை காலை 11.00 மணி அளவில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொள்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முகப்பினை இடித்த அ.தி.மு.க. அரசை எதிர்த்து, நாளை அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்திருந்தார்.

மேலும், 'தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தை எப்படியாவது அகற்ற வேண்டும் என்ற, வஞ்சகமான கொடிய நோக்கம், அ.தி.மு.க. அரசுக்கு இருக்கிறது' என்று அவர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT