புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியின் குடிநீர் மேம்பாட்டுக்காக பிரான்ஸ் நாட்டு அரசு 2,100 கோடி ரூபாய் கடனாக தர தயாராக இருக்கிறது. இதை மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டு புதிய தூதராக பொறுப்பேற்க உள்ள அலெக்சாண்டர் சைக்லர் நேற்று புதுச்சேரிக்கு வந்திருந்தார். சட்டப்பேரவை வளாகத்தில் முதல் வர் நாராயணசாமியை அவர் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு முடிந்த பின்னர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீண்டகாலம் பிரெஞ்சு ஆதிக்கத் தின் கீழ் இருந்த பகுதி புதுச்சேரி. புதுச்சேரியின் முன்னேற்றத்துக்கு பிரான்ஸ் பல வகைகளில் உதவி வருகிறது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் குடிநீர் மேம்பாட் டுப் பணிகளுக்காக ரூ.2,100 கோடியை வழங்க தயாராக இருப்ப தாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள் ளது. இதற்காக இந்தியாவும், பிரான்சும் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இத்தொகையை மத்திய உள்துறை கடனாகப் பெற்று, புதுச்சேரி அரசுக்கு அதை முழு மானியமாக தர கோரியுள்ளோம். மத்திய அமைச்சரவை இதற்கான முடிவு விரைவில் எடுக்கும் என எதிர்பார்க்கிறேன்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்
புதுச்சேரி, உழவர்கரை ஆகிய நகராட்சிகளை ஒருங்கிணைத்து ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை செயல் படுத்த திட்ட மதிப்பீட்டை அனுப்ப உள்ளோம். இதற்கும் பிரான்ஸ் அரசு நிதியுதவி செய்வதாக தெரிவித்து உள்ளது. புதுச்சேரி கடற்கரை பிரான்ஸ் நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்தப்படும். இப்பணிகள் குறித்து தூதருடன் பேச்சுவார்த்தை நத்தப்பட்டது.
புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழியைக் கற்பிக்க ஏதுவாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அந்த மொழி ஆசிரியர்கள் விரைவில் புதுச்சேரிக்கு வர உள்ளனர்.
பிரான்ஸ் கலைக் குழு வருகை
மேலும் தூதர் உடனான சந்திப் பில், நமது கலை, பண்பாடுகளை பறைசாற்றும் கலை விழாக்களை பிரான்ஸ் நாட்டில் புதுச்சேரி அரசு சார்பில் நடத்துவதற்கான தேதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பிரான்ஸ் நாட்டு கலைக் குழுவினர் புதுச்சேரிக்கு வந்து கலை நிகழ்ச்சிகளை நடத்தவும் உள்ளனர்.
பிரான்ஸ் தொழிலதிபர்கள் புதுச்சேரிக்கு வந்து தொழில்களை தொடங்குவது குறித்தும், அதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதித்தோம். பிரான்ஸ் நாட்டு வெளியுறவு இணை அமைச்சர் புதுச்சேரிக்கு ஆகஸ்ட் மாதம் வருகிறார். புதுச்சேரி - பிரான்ஸ் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த அப்போது நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.