சென்னை அருகே உள்ள திருநின்றவூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் கோரி 20 ஆண்டுகளாகப் போராடியும் பலன் இல்லாததால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர ரயில்பயணிகள் பொதுநலச் சங்கம் முடிவு செய்துள்ளது.
சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் சென்னையில் இருந்து 29 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நகரம் திருநின்றவூர். பாடல் பெற்ற திருத்தலம் இருதயலீஸ்வரர் கோவில், பக்தவச்சலப் பெருமாள் கோவில், கலைக் கல்லூரி, 2 பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், 6 உயர்நிலைப் பள்ளிகள், இரண்டு தொழிற்சாலைகளுடன் இந்த நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது.
தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், மகளிர், சிறுவியாபாரிகள் உள்ளிட்டோர் புறநகர் மின்சார ரயில்களையே பெரிதும் நம்பியுள்ளனர்.
திருநின்றவூர் பாக்கம், தாமரைப்பாக்கம் கூட்டுரோடு வரை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சென்னைக்கு தினசரி பால் மற்றும் காய்கறிகளை கொண்டு செல்கின்றனர்.
திருநின்றவூர் ரயில் நிலையத்தின் தென்பகுதியில் கோவில்களும், கன்னிகாபுரம் பஸ்நிலையமும் மற்றும் 15 கிராமங்களும் உள்ளன. அதுபோல ரயில் நிலையத்தின் வடபகுதியில் ஆவடி, திருவள்ளூர், திருப்பதி செல்லும் நெடுஞ்சாலை, 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் திருநின்றவூர் ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டுமென்றால், தண்டவாளத் தைக் கடந்துதான் செல்ல வேண்டும்.
1-வது மற்றும் 3-வது தண்டவாளத்தில் அடிக்கடி சரக்கு ரயிலை நிறுத்தி வைக்கின்றனர். அதனால், ரயில் நிலையத்தின் இருபகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கும் கடைகளுக்கும் செல்லும் பெண்கள், மருத்துவமனைக்கு செல்லும் முதியோர் என்று பல்வேறு தரப்பினரும் ஆபத்தான சூழலில் சரக்கு ரயிலின் அடியில் புகுந்துதான் செல்கின்றனர். அப்படியில்லாவிட்டால், 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக் கொண்டுதான் வர வேண்டும்.
அதனால், ரயில் தண்டவாளத் தைக் கடப்பவர்களைப் பிடித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் ரூ.250, ரூ.500 அபதாரம் விதிக்கின்றனர். கழிப்பிடங்கள் பூட்டியே கிடக்கின்றன. குடிக்க முடியாத அளவுக்கு உப்பாக இருப்பதால் குடிநீரை யாரும் குடிப்பதேயில்லை. ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் 6 டியூப் லைட்டுகள் உள்ளன.
அதில் ஒன்றுகூட எரியவில்லை என்று புகார் கூறும் பயணிகள், அடிப்படை வசதிகள் அறவே இல்லாமல் பல ஆண்டுகளாக அல்லல்படுகிறோம் என்கின்றனர்.
இதுகுறித்து திருநின்றவூர் ரயில் பயணிகள் பொதுநலச் சங்கச் செயலாளர் எஸ்.முருகையன் கூறுகையில், திருநின்றவூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் கோரி 20 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம்.சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு தபால், பதிவுத் தபால், பேக்ஸ் என பல வழிகளிலும் புகார் கொடுத்து எவ்விதப் பலனும் இல்லை. எனவே, சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தொடரவுள்ளோம் என்றார்.