சென்னை மெட்ரோ ரயில் போக்கு வரத்துக்காக பிரேசில் நாட்டில் இருந்து மேலும் 2 குளு, குளு மெட்ரோ ரயில்கள் கப்பல் மூலம் 14-ம் தேதி சென்னை வருகிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை கோயம் பேடு பணிமனையில் முதல்வர் ஜெயலலிதா நவம்பர் 6-ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக கோயம் பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை பறக்கும் பாதையில் மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிடப் பட்டுள்ளது. எனவே, அந்தப் பாதையில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மெட்ரோ ரயில் போக்கு வரத்துக்காக பிரேசில் நாட்டில் இருந்து இதுவரை தலா 4 பெட்டிகள் கொண்ட 3 ரயில்கள் வந்துவிட்டன. இப்போது 4 மற்றும் 5-வது ரயில்கள் பிரேசில் நாட்டில் இருந்து சென்னைக்கு கப்பலில் கடந்த 15-ம் தேதி ஏற்றி அனுப்பப்பட்டது. இந்த ரயில்கள் ஜனவரி 14-ம் தேதி சென்னை வந்து சேரும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.
பிரேசில் நாட்டு நிறுவனம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு மொத்தம் 42 அதிநவீன குளு, குளு ரயில்களை (168 பெட்டிகள்) தயாரித்துக் கொடுக்கிறது. ஒரு பெட்டியின் விலை ரூ.8 கோடி. இப்போது கப்பலில் வந்து கொண்டிருக்கும் ரயில்களையும் சேர்த்தால் 5 ரயில்கள் வந்துவிடும்.
இதுபோக 4 ரயில்கள் பிரேசிலில் இருந்து வர வேண்டும். மீதமுள்ள 33 ரயில்கள், ஆந்திர மாநிலம், சிட்டி தொழிற்பேட்டையில் பிரேசில் நாட்டு நிறுவனம் அமைத்துள்ள பிரத்யேக தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பிவைக்கப்படும்.