கோடநாடு காவலாளி கொலை வழக்கில் கைதான 4 பேரிடம் கோடநாடு எஸ்டேட்டில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ம் தேதி காவலாளியை கொலை செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது மர்ம கும்பல். எஸ்டேட்டில் ஓட்டுநராக பணியாற்றிய கனகராஜ், கோவையைச் சேர்ந்த தனது நண்பர் சயானுடன் சேர்ந்து கொள்ளைக்கு சதித்திட்டம் தீட்டி செயல்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இவர்களை போலீஸார் தேடிய நிலையில், நேற்று முன்தினம் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு நபரான சயான் குடும்பத்தினருடன் கேரளா செல்லும்போது சாலை விபத்தில் சிக்கி, கவலைக்கிடமான நிலையில் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் காரில் பயணம் செய்த மனைவி மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
கொள்ளையில் ஈடுபட்ட 11 பேர்
காவலாளி கொலை சம்பவம் தொடர்பாக கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார் ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். கொள்ளை முயற்சியில் 11 பேர் ஈடுபட்டதாக, பிடிபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கூறும்போது, “கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்க கனகராஜ் திட்டம் தீட்டியுள்ளார். போலி நம்பர் பிளேட் உடைய 3 கார்களில் 11 பேர் வந்து, காவலாளி கிருஷ்ண பகதூரை 8-ம் நுழைவு வாயில் அருகே லாரியில் கட்டிப் போட்டுள்ளனர். 10-ம் நுழைவு வாயிலில் காவலாளி ஓம் பகதூரை கொலை செய்து, மரத்தில் கட்டிப் போட்டுள்ளனர்.
பின்னர், எஸ்டேட்டில் புகுந்த அவர்கள், அங்கு பணம் இல்லாததால் ஜெயலலிதா, சசிகலாவின் அறைக்குள் புகுந்து 5 கடிகாரங்கள் மற்றும் அலங்கார பொருட்களைத் திருடிக்கொண்டு தப்பியுள்ளனர். பிடிபட்டவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் அலங்கார பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் அரசியல் சர்ச்சைகள் ஏதும் இல்லை” என்றார்.
இந்நிலையில், கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு கைதான சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார் ஆகியோரை காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் போலீ ஸார் நேற்று காலை கோடநாடு அழைத்துச் சென்று விசாரித்தனர். கோடநாட்டில் விசாரணை நடந்த தால், அப்பகுதி முழுவதையும் போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். அவ்வழியே யாரையும் நுழைய அனுமதிக்க வில்லை. சுமார் 3 மணி நேரம் அங்கு விசாரணை நடைபெற்றது.
பின்னர் அவர்களை அங்கிருந்து கோத்தகிரிக்கு அழைத்து வந்து, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சவுந்திரராஜன் உத்தரவின்பேரில் 4 பேரையும் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மேலும் இருவர் பிடிபட்டனர்
கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலை யில், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பிஜித் ஜாய், ஜம்ஷீர் ஆகியோரை கேரள போலீஸார் பிடித்துள்ளனர். மலப்புரம் அரிக் காடு காவல் நிலையத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், இருவரும் கார் திருட்டில் ஈடுபட்டு வந்ததும், கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலையாளி களுக்கு வாகனங்களை வழங்கி யதும் தெரியவந்தது. இருவரையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்துவரும் தனிப்படையினர் கேரளா விரைந்துள்ளனர். இந்த வழக்கில் மீதமுள்ள 3 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
மழையில் கரைந்த தடயம்
இந்நிலையில், பாலக்காட்டில் சயான் வாகனம் விபத்துக்குள்ளான இடத்தில் கேரள தடயவியல் நிபுணர் ரேணி தாமஸ் சோதனை செய்தார். ஆனால், நேற்று அப்பகுதியில் மழை பெய்ததால், தடயங்களைச் சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை கோத்தகிரி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீஸார். | படம்: பிடிஐ.