தமிழகம்

ப.சிதம்பரம் பேசியதை இலங்கை அமைச்சர் விமர்சிப்பதா?- கருணாநிதி காட்டம்

செய்திப்பிரிவு

மனித உரிமை மீறல்கள் குறித்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதை, இலங்கை அமைச்சர் கடுமையாக விமர்சிப்பதுதான் நட்பு நாட்டுக்கான இலக்கணமா? என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இலங்கைக் கடற்படையினருக்கு ராணுவ பயிற்சி அளிக்க முன்வந்துள்ள முடிவினைத் திரும்பப் பெற்று, அதனை வெளிப்படையாக அறிவிக்க முன் வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு அக்கறை காட்டுகிறதோ இல்லையோ, ஈழத்தமிழர்களின் பிரச்சினை என்றாலே, அது தீருவதாக இல்லை. மீனவர்கள் பிரச்சினையாக இருந்தாலும், அகதிகள் பிரச்சினையாக இருந்தாலும், இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவிலே பயிற்சி கொடுப்பதாக இருந்தாலும் இந்த ஆட்சியில் எதுவும் முறையாகவோ, முழுமையாகவோ தீர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதன் காரணமாக வேதனைகள் தீரவில்லை; அவை தொடர்ந்து தரும் துன்பமும் மாறவில்லை.

ஓங்கிக் குரல் கொடுக்கும் திமுக:

திராவிட முன்னேற்றக் கழகமும் தன்னால் இயன்ற அளவிற்கு என்னென்ன செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் இலங்கைத் தமிழர்களின் நலனை மனதிலே கொண்டு தொடர்ந்து செய்து கொண்டுதான் உள்ளது. 1956ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலே இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஈழத்தமிழர்களுக்காக ஓயாது ஓங்கிக் குரல் கொடுத்து வருகிறோம் என்பதை உண்மையை நேசிப்ப வர்கள் உணர்ந்தே இருப்பார்கள்.

நமது பல்வேறு கோரிக்கைகளுக்கு இந்திய அரசு உதவிட முன்வருவதாக உறுதி கூறிய போதிலும், உலக நாடுகளின் மத்தியில் நடுநிலை நாடுகளில் ஒன்று இந்தியா என்ற பெயரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, சிலவற்றில் விட்டுக் கொடுத்துப் போகிறதோ என்று சிலர் சந்தேகம் கொள்ளக் கூடிய அளவிலேதான் செயல்படுகிறது.

அதற்கு உதாரணம் தான், இலங்கைத் தமிழர்களைக் கொல்வதற்குக் காரணமாக இருக்கும் இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவிலே எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதுதான் தமிழகத்திலே உணர்வுள்ள தமிழர்களின் கோரிக்கை, வேண்டுகோள். அந்த வேண்டுகோளை இந்திய அரசிடம் நாம் பலமுறை விடுத்து விளக்கியுள்ளோம்.

நாம் மாத்திரமல்ல; தமிழகத்திலே உள்ள அரசின் சார்பில் முதலமைச்சரும் பிரதமருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். தமிழகத்திலே உள்ள மற்றக் கட்சிகளும் அதற்காகக் குரல் கொடுத்த போதிலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்தச் செய்தி, அதாவது இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியா பயிற்சி அளிக்கும் செய்தி வந்து கொண்டு தான் இருக்கிறது.

தற்போது இலங்கைக் கடற்படைக்கு பயிற்சி அளிக்க இந்தியா மீண்டும் விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிபரிடம் இந்தத் தகவலை இந்தியக் கடற்படை தளபதி டி.கே. ஜோஷி நேரில் தெரிவித்திருக் கிறார். சர்வ தேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கை சென்ற டி.கே. ஜோஷி, இலங்கைக் கடற்படை அதிகாரிகளுக்கு நான்கு ஆண்டு கால இளநிலை தொழில் நுட்ப கல்வி குறித்த பயிற்சி அளிப்பதற்கு இந்தியக் கடற்படை தயாராக இருப்பதாக ராஜபக்ஷேவிடம் நேரில் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் குன்னுhர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லுhரியில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பட்ட போது, 17-7-2012 அன்று நான் விடுத்த கண்டன அறிக்கையில், "குன்னுhரில் உள்ள ராணுவப் பயிற்சி கல்லூரியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், அதில் வியட்னாம், நைஜீரியா, பங்களா தேஷ், பிரிட்டன் உள்ளிட்ட பத்து நாடுகளைச் சேர்ந்த 25 ராணுவ அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர் என்றும், அதிலே இரண்டு இலங்கை ராணுவ அதிகாரிகளும் இருப்பதாகவும் ஏடுகளில் செய்தி வந்துள்ளது.

இலங்கை ராணுவத்தினர் தொடர்ந்து ஈழத் தமிழர்களைத் தாக்கிக் கொடுமைப்படுத்தி வரும் நிலையில், அந்த இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சியளிப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. மத்திய அரசு உடனடியாக அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் தொடர்ந்து இது போன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டு தமிழர்களின் மனதைப் புண்படுத்தும் செயலைத் தவிர்ப்பது நல்லது என்பதே என் கருத்தாகும்" என்றும் தெரிவித்திருந்தேன். தமிழகத்திலே உள்ள மற்றக் கட்சியினரும் அப்போது அந்த நடவடிக்கையைக் கண்டித்து அறிக்கை விடுத்தார்கள். அதன் பிறகு மத்திய அரசு இலங்கை ராணுவத்தினரை தமிழகத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றி, அங்கே பயிற்சியளிக்க ஏற்பாடு செய்தது.

ஆனால் எங்களுடைய கோரிக்கை, இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பயிற்சியளிக்கக் கூடாது என்பது தான். ஆனால் மத்திய அரசு இந்த வேண்டுகோளைக் கூட ஏற்க முன்வரவில்லை. கேட்டால், இலங்கை நட்பு நாடு என்று சொல்கிறார்கள். இந்தியா நட்பு நாடு என்றால், தமிழ்நாடு இந்தியாவிற்குள் இருக்கும் ஒரு மாநிலம் இல்லையா? அந்த மாநில மக்களின் உணர்வுகளுக்கு முதல் இடம் தந்து சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? இலங்கையை இந்தியா நட்பு நாடாகக் கருதுகின்ற நேரத்தில், இலங்கை இந்தியாவை நட்பு நாடாகக் கருத வேண்டாமா? இந்திய அரசின் குரலுக்கு இலங்கை மதிப்பளிக்கிறதா?

இது தான் நட்பு நாட்டுக்கான இலக்கணமா?

இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் பேசிய மத்திய நிதி அமைச்சர், ப. சிதம்பரம் இலங்கை அரசியல் குறித்தும், அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தும் பேசியிருந்தார். அதற்கு இலங்கை கேபினட் அமைச்சர், சுசில் பிரேம ஜெயந்தா, பி.பி.சிக்கு அளித்த பேட்டியில் பதில் அளித் திருக்கிறார். அந்தப் பதிலில் "இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடும் அதிகாரம், வெளிநாடுகளுக்குக் கிடையாது.

தென் இந்தியாவில் உள்ள தமிழர் களின் நிலையை விட இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை நன்றாக உள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த தலைவர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் மக்கள் மீது முதலில் அக்கறை செலுத்த வேண்டும். அதை விட்டு விட்டு, இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தங்களது மூக்கை நுழைக்கக் கூடாது"" என்றெல்லாம் கூறியதாக ஒரு தமிழ் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படி விமர்சிப்பது தான் நட்பு நாட்டுக்கான இலக்கணமா?

அதுமாத்திரமல்ல; ஆங்கில நாளிதழில் ஒன்றின் முதல் பக்கத்தில் வந்துள்ள செய்தியில், கடந்த வாரம் ராஜபக்ஷேயின் சகோதரர், கோத்தபயே ராஜபக்ஷே டெல்லி வந்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரும், காமன்வெல்த் மாநாட்டிற்காக இலங்கை சென்றவருமான சல்மான் குர்ஷித் உட்பட பலரைச் சந்தித்து இரண்டு நாடுகளும் கடற்படை உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப் பட்டுள்ளது.

மத்திய அரசு மீது சந்தேகம்:

இதிலிருந்து இந்திய அரசு தமிழ்நாட்டு மக்களின் நலனை விட, இலங்கையின் நட்பு தான் அவசியம் என்று கருதுகிறதோ என்ற அய்யப்பாடு தமிழ் மக்களிடையே எழுகிறது என்பதை மனதிலே கொண்டு, இனியாவது இந்திய அரசு தமிழர்களும் இந்திய நாட்டு மக்களே என்ற எண்ணத்தோடு, அவர்களின் உணர்வுகளுக்கு உரிய மதிப்பளித்திட வேண்டுமென்று வலியுறுத்துவதோடு, அதற்கு அடையாளமாக தற்போது இலங்கைக் கடற்படையினருக்கு ராணுவ பயிற்சி அளிக்க முன்வந்துள்ள முடிவினைத் திரும்பப் பெற்று, அதனை வெளிப்படையாக அறிவிக்க முன் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT