தமிழகம்

போக்குவரத்து நெரிசலில் திணறும் அண்ணாநகர்

இரா.நாகராஜன்

மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுவதைத் தடுக்கும் நோக்கில், அண்ணா நகர் பகுதியில் தொடங்கப்பட்ட ஓட்டேரி நல்லா கால்வாய் - கூவம் நதி இணைக்கும் பணிமந்தமாக நடப்பதால், அண்ணாநகர் வாசிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.

கடந்த 2005-ம் ஆண்டு, கடுமையாக பெய்த வடகிழக்கு பருவ மழையால், சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. அப்போது பாடியிலிருந்து 10.84 கி.மீ. தூரம் சென்று, வடக்கு பக்கிங்ஹாம் கால்வாயுடன் இணையும் ஓட்டேரி நல்லா கால்வாயில், அதிகளவில் சென்ற மழை நீர், அண்ணா நகர், புரசைவாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளுக்குள் புகுந்ததால், பொது மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

எனவே, மழை வெள்ள பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், 2010-ஆம் ஆண்டு, ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், ரூ.633 கோடி மதிப்பில் பொதுப்பணித் துறை, நீர் நிலைகளை மேம்படுத்தும் பணிகளை தொடங்கியது.

கொடுங்கையூர், விருகம்பாக்கம், அரும்பாக்கம், தெற்கு பக்கிங்ஹாம், வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய்கள் மற்றும் வீராங்கல் ஓடை, வேளச்சேரி ஏரியின் குறுக்கு வடிகால்வாய்கள், அம்பத்தூர் ஏரி ஆகியவற்றை மேம்படுத்துதல், கொளத்தூர், மாதவரம், மதுரவாயல் பகுதிகளில் மாற்றுக் கால்வாய்கள் அமைத்தல் ஆகிய பணிகளை உள்ளடக்கிய நீர்நிலை மேம்படுத்தும் பணிகளில் ஒன்று, ஓட்டேரி நல்லா கால்வாயை, கூவம் நதியுடன் இணைக்கும் வகையிலான கால்வாய் அமைக்கும் பணி.

அண்ணா நகர் 3வது அவென்யூ சாலையில், ஓட்டேரி நல்லா கால்வாயிலிருந்து, கூவம் நதி வரை, 1,450 மீட்டர் தூரத்துக்கு, சாலையின் மையப் பகுதியில், பூமிக்கு அடியில் ரூ.30 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படுகிற இப்பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.

இதில், 3.65 மீட்டர் ஆழம், 6.6 மீட்டர் அகலத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில், 2.9 மீட்டர் நீளம், 5.4 மீட்டர் அகலம் கொண்ட, பிரிக்காஸ்ட்’ எனப்படும், முன் கூட்டியே தயார் செய்த கான்கிரீட்டால் ஆன கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.

அதிகபட்சமாக, 7 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்ட இப்பணி, மந்தமாக நடப்பதால், தற்போது 40 சதவீத பணிகளே முடிந்திருக்கின்றன. இதனால், அண்ணாநகர் வாசிகள் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகிறார்கள்.

இதுகுறித்து, அண்ணாநகர் கிழக்கு, ‘எல்‘ பிளாக் சிவிக் எக்ஸ்னோரா செயலர் பாலமுருகன் தெரிவித்ததாவது:

அண்ணா நகர் பகுதியில் ரவுண்டானா பகுதிகளில் நடைபெற்று வரும், மெட்ரோ ரயில் பணி, அண்ணா வளைவு, திருமங்கலம் பகுதிகளில் நடைபெறும் மேம்பாலங்கள் பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில், 3வது அவென்யூ சாலையில், கால்வாய் அமைக்கும் பணி நத்தை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் குறுகிப் போய் உள்ள சாலையின் பெரும் பகுதியில், அதிக வாகனங்கள் சென்று வருவதால், அது மண் சாலையாக உருமாறி விட்டது. இதனால் வாகன ஓட்டிகளும்பாதசாரிகளும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கிறது என்று பாலமுருகன் கூறினார்.

இதுகுறித்து, பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

அண்ணா நகர் 3வது அவென்யூ சாலை, போக்குவரத்து அதிகம் உள்ள சாலை. இதனால், பகல் பொழுதில் பணிபுரிய வாய்ப்பில்லை. எனவே இரவில்தான் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணியிலும் பல தடங்கல்கள் வருகின்றன. இதுதான், பணியின் தாமதத்திற்குக் காரணம். அக்டோபர், நவம்பர் மாதங்கள் மழைக்காலம் என்பதால், பணியை தொடர்ந்து செய்து, துரிதகதியில் முடிக்க இயலாது. எனவே, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் இத்திட்டம் முடிவு பெறும் என்றார்.

SCROLL FOR NEXT