தமிழகம்

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்துக்கு 20 பதக்கங்கள் கிடைக்கும் வகையில் சிறப்பு திட்டம்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

செய்திப்பிரிவு

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்கள் 20 பேரை பதக்கம் பெற வைக்கும் வகையில் தொலைநோக்கு சிறப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று நாங்குனேரி தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஹெச். வசந்தகுமார் பேசும்போது, “நாங்குனேரி தொகுதியில் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது. அதை முடித்தால், பல விளையாட்டு வீரர்களை உருவாக்கலாம்’’ என்றார்.

இதற்கு பதிலளித்து பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியதாவது:

இந்தியாவிலேயே முதல் முறையாக, விளையாட்டு பல் கலைக்கழகம் அமைக்கப்பட்டது தமிழகத்தில்தான். மேலும், ஆண்டுக்கு 5 இளைஞர்கள், 5 யுவதிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.25 லட்சம் செலவில் உள்நாட்டு, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பயிற்சி அளிக்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் கலந்துகொண்டனர். ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்தவர்களை அதிகளவில் பங்கேற்க வைக்கும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு ரூ.104 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் இதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே ஒதுக்கப் பட்டது.

தொலை நோக்குடன்

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் வீரர்களில் 20 பேர் பதக்கம் பெறும் வகையில், தொலை நோக்குடன் சிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.பாண் டியராஜன் பதிலளித்தார்.

SCROLL FOR NEXT