கடைசி நேரத்தில் பாஜக வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் நெல்லை மேயர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் புவனேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். குன்னூர், புதுக்கோட்டை, சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர்கள் உட்பட பல இடங்களில் அதிமுகவினர் போட்டியின்றி தேர்வாகினர்.
தமிழகத்தில் காலியாக இருக்கும் கோவை, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிகள் உட்பட மாநகராட்சி வார்டுகள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி வார்டுகள் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு வரும் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக பாஜக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. கோவை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் கணபதி ராஜ்குமார், பாஜக சார்பில் நந்தகுமார், நெல்லை மேயருக்கு புவனேஸ்வரி (அதிமுக), வெள்ளையம்மாள் (பாஜக), தூத்துக்குடி மேயருக்கு அந்தோணி கிரேஸி (அதிமுக), ஜெயலட்சுமி (பாஜக) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
நெல்லை மேயர் பதவிக்கு அதிமுக, பாஜக தவிர 11 சுயேச்சைகளும் மனு செய்திருந் தனர். பரிசீலனையின்போது அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதிமுக, பாஜக வேட்பாளர்களின் மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன. இந்நிலை யில், மனுவை வாபஸ் பெறுவதற் கான கடைசி நாளான திங்கள் கிழமை பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள் தனது மனுவை திடீரென வாபஸ் பெற்றார். இதனால், அதிமுக வேட்பாளர் புவனேஸ்வரி நெல்லை மேயராக போட்டியின்றி தேர்ந்தெடுக் கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல புதுக்கோட்டை, குன்னூர், சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் பதவிகளுக் கும் அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டனர். புதுக்கோட்டையில் ஆர்.ராஜசேகரன், குன்னூரில் சரவணகுமார், சங்கரன்கோவிலில் ராஜலட்சுமி ஆகியோர் நகரமன்றத் தலைவர்களாக தேர்வு பெற்றுள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் 166-வது வார்டில் அதிமுக வேட்பாளர் எஸ்.எஸ்.கே.ராஜேந்திரன், பல்லாவரம் நகராட்சி 2-வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.கணேசன், ஆவடி நகராட்சி 33-வது வார்டில் உமா மகேஸ்வரி (அதிமுக), தாம்பரம் நகராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் நாகூர்கனி (7-வது வார்டு), கோமளா (33-வது வார்டு) ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் 14 உள்ளாட்சி மன்ற காலி இடங் களுக்கு தேர்தல் அறிவிக்கப் பட்டதில், 11 இடங்களுக்கான வேட் பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச் சியில் 5 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் 76 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், 64 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 28 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோவை, தூத்துக்குடி மேயர் பதவிகள் உட்பட மற்ற இடங்களுக்கு 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது.