தமிழகம்

சென்சார் போர்டு சான்றிதழ் பெற்ற முதல் சௌராஷ்டிரா மொழி திரைப்படம்

அ.வேலுச்சாமி

சௌராஷ்டிரா மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் மாநிலம் தமிழகம். சென்னை, நெல்லை, தஞ்சை, திண்டுக்கல் எனப் பல நகரங்களில் இவர்கள் வசித்தாலும், மதுரையில்தான் அதிகபட்சமாகச் சுமார் 4 லட்சம் பேர் வசிக்கின்றனர். குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இம்மக்கள், மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தின்போது பெருமளவில் மதுரைக்குக் குடிபெயர்ந்து விட்டதாக வரலாறு கூறுகிறது.

எழுத்து வழக்கில் சௌராஷ்டிரா மொழி படிப்படியாக அழிந்துவரும் நிலையில், பேச்சு வழக்கிலும் பிற மொழி கலப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. வசிப்பிடத்துக்குத் தகுந்தபடி தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, கன்னடம், தெலுங்கு போன்றவை சௌராஷ்டிரா மொழியுடன் சேர்த்துப் பேசப்பட்டு வருகின்றன. எனவே அந்த மொழிகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள்தான் இவர்களுக்கும் பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக சௌராஷ்டிரா மொழியில் குறும்படங்கள், வீடியோ படங்களை அந்த மொழி பேசும் சிலர் தயாரித்துத் திருமண மண்டபங்கள், கருத்தரங்கக் கூடங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதற்குச் சௌராஷ்டிரா மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைப்பதால், திரைப்படம் தயாரிப்பதிலும் தற்போது ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டனர்.

இதன் தொடக்கமாக ‘ஹெட் டெஜொமை’ (அசட்டு மாப்பிள்ளை) என்ற பெயரில் ஒரு திரைப்படத்தைத் தயாரித்து, அதற்கு சென்சார் போர்டின் சான்றிதழையும் பெற்றுள்ளார் 68 வயது நிரம்பிய மதுரையைச் சேர்ந்த இயக்குநர் வி.கே.நீலாராவ். இப்படம் வரும் 15-ம் தேதி மதுரை அலங்கார் திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது. இதுபற்றி வி.கே.நீலாராவ் கூறியதாவது:

சௌராஷ்டிரா மொழியில் இதுவரை வீடியோ படங்கள் மட்டுமே சென்சார் போர்டு சான்றிதழைப் பெற்றுள்ளன. அவற்றில் சில அனுமதிக்கு மாறாக தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. ஆனால் தியேட்டரில் ரிலீஸ் செய்யும் வகையிலான சென்சார் போர்டு சான்றிதழ் இப்படத்துக்குத்தான் முதல் முறையாகக் கிடைத்துள்ளது. 1 மணி நேரம் 55 நிமிடம் ஓடக்கூடிய இப்படத்தில் காதல், நகைச்சுவை, பாடல், சண்டைக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஹீரோவாக மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ், ஹீரோயினாக மலையாள நடிகை ஜெர்ஸா நடித்துள்ளனர். திரைப்பட விருதுக்கான பட்டியலில் சௌராஷ்டிரா மொழிப் படங்களையும் சேர்க்க வேண்டும். வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT