வெள்ளையப்பன் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். போலீஸ் காவல் முடிந்த நிலையில் பக்ருதீனை வரும் 31-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் கடந்த ஜூலை 1-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீனை சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். வெள்ளையப்பன் கொலை எப்படி நடந்தது. கொலைக்குப் பிறகு எப்படி தப்பிச் சென்றனர். எவ்வாறு புத்தூர் வீட்டில் பதுங்கி இருந்தனர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் சிபிசிஐடி போலீஸார் சேகரித்துள்ளனர்.
வெள்ளையப்பன் கொலை வழக்கில் போதுமான தகவல்களை சேகரித்துள்ள நிலையில் வியாழக்கிழமையுடன் பிலால் மாலிக்கின் போலீஸ் காவல் முடிந்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதே வழக்கில் போலீஸ் பக்ருதீனின் போலீஸ் காவல் வெள்ளிக்கிழமை முடிந்தது.
இதையடுத்து எஸ்பிக்கள் அன்பு, நாகஜோதி, விஜயகுமாரி ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலீ்ஸ் பாதுகாப்புடன் வேலூர் ஜே.எம்.3 நீதிமன்ற நீதிபதி ரேவதி (பொறுப்பு) முன்னிலையில் போலீஸ் பக்ருதீனை ஆஜர்படுத்தினர். அப்போது, சிபிசிஐடி தரப்பில் சீலிட்ட உறையில் வெள்ளையப்பன் கொலை வழக்கின் விசாரணை விவரங்களை காவல் துறையினர் தாக்கல் செய்தனர். மேலும், போலீஸ் பக்ருதீனின் விசாரணை காவலை முடித்துக் கொள்கிறோம் என்று மனு தாக்கல் செய்தனர். வரும் 31-ம் தேதி வரை போலீஸ் பக்ருதீனை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி ரேவதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் பக்ருதீன் அடைக்கப்பட்டார்.
முன்னதாக, பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட போலீஸ் பக்ருதீன், முகத்தை துண்டால் மறைத்தபடி அழைத்துவரப்பட்டார். பத்திரிகையாளர்களை பார்த்தும் நான் பேசுவது உங்களுக்கு கேட்கிறதா?’ என்றவர், இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்களும் வாழ விரும்புகிறோம். பொய் வழக்கு போட்டுள்ளார்கள்’ என சத்தமாகக் கூறினார். பத்திரிகையாளர்களிடம் பேசுவதற்காக மூடிய முகத்தை திறக்க முயன்றபோது, சிபிசிஐடி போலீஸார் பக்ருதீனை தடுத்துவிட்டனர்.
சிபிசிஐடி போலீ்ஸ் காவலில்இருந்த பக்ருதீனை கண்ணைக்கட்டி வியாழக்கிழமை முழுவதும் வேலூரில் சுற்றியுள்ளனர். அவரை மிரட்டி வாக்குமூலம் பெற்றுள்ளனர். பக்ருதீனை மிருகத்தைப்போல நடத்தியுள்ளனர். கையெழுத்து ஒப்பீட்டுக்கு சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர். சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ள விசாரணை விவரங்களை விரைவில் கேட்டு மனு தாக்கல் செய்ய உள்ளோம்’’ என பக்ருதீனின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.
விஜயபாரத மக்கள் கட்சியினர் கைது
போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் புகழேந்தி வேலூர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகி வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்கறிஞர் புகழேந்தியை கைது செய்ய வலியுறுத்தியும் விஜய பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் 46 பேர் வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு கருப்பு கொடியுடன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.