தமிழகம்

காவிரியில் அணைகளை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

காவிரியில் அணைகளை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

கர்நாடக மாநிலம் மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் அடுத்தக் கட்டத்துக்கு கர்நாடக அரசு நகர்ந்திருக்கிறது. புதிய அணை ரூ.5,912 கோடியில் கட்டப்படும் என்றும், இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் அம்மாநில முதல்வர் சித்தராமய்யா பெங்களூரில் நடந்த சுதந்திர தின விழாவில் கூறியிருக்கிறார். மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடகம் எப்போது தாக்கல் செய்தாலும் அதை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா,காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் தடுப்பு அணைகள் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் தடுப்பு அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்திடவும், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு அமைத்திட வலியுறுத்தியும் ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் முழு கடையடைப்பு, சாலை மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் மதிமுகவினர் பங்கேற்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:

கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்துக்குரிய தண்ணீரை கொடுக்காத காரணத்தால் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டு காலமாக குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படவில்லை, இதன் விளைவாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டு ஒரு போக சம்பா சாகுபடி நடைபெறுவதே கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டப்பட உள்ளது? இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டது என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமய்யா கூறியுள்ளார். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக அமைந்துள்ளது. இதனை தடுத்து நிறுத்தி உரிய தீர்வை காண உடனடி முயற்சிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுக்க வேண்டும்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்:

காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்ட ரூ.5,192 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமய்யா தெரிவித்திருக்கிறார். கர்நாடகாவின் சதிக்கு மத்திய அரசு உடந்தையாகவே இருக்கிறது. மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வரும் 19-ம் தேதியன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்புப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள், தோழர்கள் பங்கேற்று முழு ஆதரவு தர வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவஹிருல்லா:

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு அமைக்காமல் மவுனமாக இருக்கும் மத்திய அரசு, மேகதாது, ராசிமணல் பகுதிகளில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

SCROLL FOR NEXT