தமிழகம்

சுவாதி கொலை வழக்கு விசாரணை: நீதிபதியிடம் பிலால் மாலிக் ரகசிய வாக்குமூலம்

செய்திப்பிரிவு

சுவாதியின் நண்பர் மற்றும் தோழிகளிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24-ம் தேதி ஐடி பெண் ஊழியர் சுவாதி (24) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை யைச் சேர்ந்த ராம்குமார் (24) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சுவாதி கொலை வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக, கொலை நடந்தபோது ரயில் நிலையத்தில் நின்றிருந்த 3 பேர், முகமது பிலால் மற்றும் தோழிகள் 5 பேர் உட்பட பலர் சேர்க்கப்பட்டுள்ளனர். சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணியை நுங்கம்பாக்கம் போலீஸார் தற்போது செய்து வருகின்றனர்.

பிலால் மற்றும் சுவாதியின் தோழிகள் 5 பேரிடம் நீதிபதி முன்பு நேற்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் முன்பு பிலால் மற்றும் சுவாதியின் தோழிகள் 5 பேர் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் நீதிபதி பிரகாஷ் விசாரணை நடத்தினார். பின்னர் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

ராம்குமாரிடம் விசாரணை

புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ள ராம்குமாரை ஏற்கெனவே போலீஸார் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத் துக்கு அழைத்துச் சென்று கொலை சம்பவம் தொடர்பாக நடித்துக் காட்ட வைத்து வீடியோவும் எடுத்தனர். இந்நிலையில், நாளை (8-ம் தேதி) ஒருநாள் மட்டும் போலீஸ் காவலில் ராம்குமாரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் போலீஸார் அனுமதி வாங்கியுள்ளனர்.

SCROLL FOR NEXT