சென்னையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கார் மீது, போதை இளைஞர் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில் காவலர் படுகாயம் அடைந்தார். ரங்கசாமி உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை எழும்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பின்னர் இரவு 9.30 மணியளவில் மெரினா கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தார். அவரது காருக்கு முன்னால் பாதுகாப்பு அதிகாரியின் கார் சென்றது.
சாந்தோம் அருகே எதிரில் வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி கார் மீது பயங்கரமாக மோதியது. பின்னர் முதல்வரின் கார் மீது மோதி நின்றது. இதில் முதல்வர் ரங்கசாமி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பாதுகாவலர் செல்வம் பலத்த காயம் அடைந்தார்.
தகவல் கிடைத்ததும் அடையாறு போக்குவரத்து போலீஸ் ஆய்வாளர் ரவிக்குமரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, காயம்பட்ட செல்வத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீசார் மாற்று கார் ஏற்பாடு செய்து, ரங்கசாமியை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக சாந்தோம் நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியது சேப்பாக்கம் அருணாசலம் தெருவைச் சேர்ந்த முபாரக் அலி (30) என்பதும் அவர் போதையில் காரை ஓட்டி வந்ததும் தெரிந்தது.
அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் காரில் வந்த நண்பர்கள் சர்புதீன் (30), வாசிம் அக்ரம் (25), ஜாகீர் உசேன் (47), கமர் அலி (32) ஆகியோரும் போதையில் இருந்தனர்.
அவர்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 5 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.