தமிழகம்

மம்தாவின் கைவண்ணத்தில் தயாராகும் சேலைகள்

செய்திப்பிரிவு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சேலை வடிவமைப்பிலும் தடம் பதித்துள்ளார்.

முதல்வருக்கு தலைக்குமேல் ஆயிரத்து எட்டு வேலைகள் இருக்குமே, அப்படியிருக்க, மம்தாவுக்கு ஏன் இந்த வீண் வேலை என்று கேள்வி எழுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் இதையும் மக்கள் நலன் சார்ந்த பணியாகவே மம்தா மேற்கொண்டுள்ளார். ஏனெனில் அவர் சேலைகளை வடிவமைப்பது மாநில அரசின் கைத்தறி நிறுவனமான தந்துஜாவுக்காக. மம்தாவின் வடிவமைப்பில் உருவாகும் சேலைகளால் தந்துஜா நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு பெருமளவில் அதிகரிக்கும் என்றும் அதன் விற்பனையை வெகுவாக உயர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போதும் எளிமையுடன் தோற்றமளிக்கும் மம்தா, மாநிலத்தில் நடுத்தர வகுப்புப் பெண்கள் உள்பட அனைவரையுமே பெரிதும் கவர்ந்தவராக உள்ளார். எனவே அவர் வடிவமைக்கும் சேலைகள் பெண்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

மம்தா எப்போதுமே பெங்காலி கைத்தறி பருத்தி சேலைகளையே அணிவதை வழக்கமாகக் கொண்டவர். ஓவியம் தீட்டுவதிலும் ஈடுபாடு உடைய அவர் பெண்களை ஈர்க்கும் சேலைகளை வடிவமைப்பார் என்பதிலும் ஐயமில்லை.

எந்தப் பணியிலும் நேர்த்தி தேவை என்ற எண்ணம் உடையவரான மம்தா, தான் வடிவமைக்கும் சேலைகள் குறித்து நெசவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் நடிகை சாதனா மாடல் ஜாக்கெட், பிருந்தா காரத் பாணி பெரிய நெற்றிப் பொட்டு உள்ளிட்டவை பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அவற்றுடன் மம்தா வடிவமைக்கும் சேலையும் இணைய இருக்கிறது.

SCROLL FOR NEXT