மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த போதெல்லாம் திருச்சியில் பாஜக வெற்றிபெற்றிருக்கிறது. அந்த சென்டிமென்ட்டைச் சொல்லி, ``பாஜக இம்முறை திருச்சியில் வெற்றி பெறும்’’ என்கிறார்கள் அக்கட்சிப் பொறுப்பாளர்கள்.
திருச்சியில் மோடி கலந்துகொண்ட இளந்தாமரை மாநாட்டைப் பார்த்து திருச்சி தொகுதியில் மீண்டும் பாஜக போட்டியிட வேண்டும் என்று மாநிலத் தலைமையும் அகில இந்தியத் தலைமையும் முடிவுக்கு வந்ததாகச் சொல்கிறார்கள்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய பாஜக திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் பார்த்திபன், ``அரங்கராஜன் குமாரமங்கலம் மத்திய அமைச்சராக இருந்தபோது திருச்சிக்கு ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தினார். அவர் மீது பொதுமக்கள் அன்பு கொண்டிருந்தனர். எனவே திருச்சியில் மீண்டும் பாஜக ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுவானவர்கள் மத்தியிலும் மேலோங்கி நிற்கிறது. மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கப்போகிறது. அந்த ஆட்சியின் துணையோடு திருச்சிக்கு பல நல்ல திட்டங்கள் வந்து சேரவேண்டுமென்றால் திருச்சியில் பாஜக போட்டியிட்டு ஜெயிக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம்’’ என்றார்.
அரங்கராஜன் குமாரமங்கலம் மறைவுக்குப் பிறகு பாஜக வேட்பாளர் சுகுமாறன் நம்பியார் அதிமுக வேட்டபாளர் தலித் எழில்மலையிடம் தோற்றார். 2009 தேர்தலில் லலிதா குமாரமங்கலம் 30,329 வாக்குகள் மட்டுமே பெற்று 4-வது இடத்தைப் பிடித்தார். இந்தமுறை மீண்டும் லலிதா குமாரமங்கலம் அல்லது பாஜக-வின் மாநிலச் செயலாளருமான சுப்பிரமணியன் ஆகியோரது பெயர்கள் திருச்சி தொகுதிக்கு முன்னிலைப்படுத்தப்படுகின்றன.