அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், அமைச்சர் என்றால் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா எனவும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள கீழவாழாச்சேரியைச் சேர்ந்த சிவஞானம் மகன் எஸ்.வி.எஸ்.குமார், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மந்தைவெளி சிருங்கேரி மடத்து தெரு பகுதியில் ஒரு வீட்டை வாங்கினேன். வீட்டை விற்றவர் 6 மாதத்தில் காலி செய்து தருவதாக கூறினார். ஆனால், சொன்னபடி அவர் வீட்டை காலி செய்து தரவில்லை.
இதுபற்றி தமிழக அமைச்சர் காமராஜின் மைத்துனர் ராமகிருஷ்ண னிடம் தெரிவித்தேன். அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வீட்டை காலி செய்து தருவதாக உறுதியளித்தார். அதற்காக 4 தவணையாக ரூ.30 லட்சத்தை என்னிடம் வாங்கினார். நான் பணம் கொடுத்தபோது அமைச்சர் ஆர்.காமராஜூம் உடனிருந்தார். ஆனால், சொன்னபடி அவர்கள் வீட்டை காலி செய்து தரவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டபோது என்னை மிரட்டினர்.
இது தொடர்பாக கடந்த 2015-ல் மன்னார்குடி டிஎஸ்பியிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். எனது வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மீண்டும் புகார் கொடுக்கும்படியும், அதன் அடிப்படையில் போலீஸார் விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. ஆனால் அச்சத்தின் காரணமாக நான் போலீஸில் ஆஜராகவில்லை. அமைச்சர் என்பதால் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் தயக்கம் காட்டுகின்றனர். எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை கடந்த மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், பணமோசடி தொடர்பான புகாரின் பேரில் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அவ்வாறு வழக்கு பதிந்து முறையாக விசாரிக்காவிட்டால் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, பி.சி.பந்த் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு செய்ய நாங்கள் உத்தரவிட்டும் இதுவரை வழக்கு பதியாதது ஏன்? அமைச்சர் என்றால் அவர் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா, இல்லை சட்டத்துக்கு மேலானவரா’’ என கடும் கண்டனம் தெரிவித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
8-ம் தேதி தள்ளிவைப்பு
அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘வழக்கு தொடர்ந்துள்ள குமார் ஒரு மோசடிப் பேர்வழி. மாறி மாறி பேசி வருகிறார். நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தப் பார்க்கிறார். இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய 10 நாள் அவகாசம் தேவை’’ என்றார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘நாங்கள் எதுவுமே தெரியாதவர்கள் அல்ல. அமைச்சர் காமராஜ் மீது வழக்கு தொடர அனைத்து முகாந்திரமும் உள்ளது. எனவே, இந்த வழக்கில் இதுவரை தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மே 8-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.