தமிழகம்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 10 ஆயிரம் பேருக்கு மத நல்லிணக்க ஓவியம் வரையப்பட்ட கலயங்களில் பிரசாதம்

செய்திப்பிரிவு

கிருஷ்ண ஜெயந்தியை முன் னிட்டு, திருநெல்வேலி அருகே அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் தருமபதி கோசாலையில் மத நல்லிணக்கத்தை வளர்க்கும் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்ட மண் கலயங்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 10 ஆயிரம் பேருக்கு வழங்க, விதவிதமான பண்டங்களை தயாரிக்கும் பணி இரவு, பகலாக நடைபெறுகிறது.

திருநெல்வேலியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இந்த கோசாலை அமைந்திருக்கிறது. இங்கு கிருஷ்ணர் இருக்கும் சந்நிதி யிலேயே 50 பசுக்கள் கட்டப்பட்டி ருக்கின்றன. வழக்கமான உறியடி திருவிழாவுடன் கிருஷ்ண ஜெயந்தி விழா இங்கு முடிவதில்லை.

கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து பக்தர்களுக்கு வண்ணங்கள் பூசப் பட்ட மண் கலயத்தில் விதவிதமான பதார்த்தங்களை பிரசாதமாக வழங்கி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு 5 ஆயிரம் பானைகளில் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இருமடங்கு அதிகமாக 10 ஆயிரம் பானைகள் வண்ணமயமாக தயார்படுத்தப்பட்டுள்ளன.

உலகிலேயே பானையில் வைத்து கிருஷ்ணருக்கு உணவு பதார்த்தங்களை படைக்கப்படுவது, மதுராவுக்கு அடுத்ததாக இந்த கோசாலையில்தான் என்று இதன் பொறுப்பாளர்கள் தெரிவிக்கிறார் கள்.

கடந்த 2 மாதங்களாக மண் கலயங்களில் ஓவியங்களை வரை யும் பணி நடைபெற்று வருகிறது. மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன. அவற்றின் வண்ண வேலைப்பாடுகள் பளிச்சிடுகின்றன. நவீன ஓவியங்களும் ஈர்க்கின்றன. கலைநயமிக்க இந்த மண் கலயங்களைப் பார்வையிட திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர் கடந்த சில நாட்களாக வந்து செல்கிறார்கள்.

இந்தப் பானைகளில் வைத்து பக்தர்களுக்கு வழங்குவதற்காக முறுக்கு, சீடை, அல்வா, அதிரசம், லட்டு, பால்கோவா, ஜாங்கிரி என்று 10-க்கும் மேற்பட்ட உணவு பதார்த்தங்களைத் தயாரிக்கும் பணியில், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இரவு பகலாக கிருஷ்ண பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு புதுமையாக பானைகளில் இம்போஸ் தொழில்நுட்பத்தில் ஓவியங்களும், உருவங்களும் வரையப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT