தமிழகத்தில் நிலவும் வறட்சியால் தேங்காய் உற்பத்தி குறைந்து அதன் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. தண்ணீர் இல்லாததால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் பட்டுப்போகும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்தியாவில் தேங்காய் உற்பத்தியை பொருத்தவரை தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இரண்டா வது, மூன்றாவது இடங்களில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள் உள்ளன. இந்த மூன்று மாநிலங்களிலும் பருவமழை குறைந்து தற்போது கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால், தேங்காய் உற்பத்தி பெருமளவு குறைந்து, விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்ல சாமி கூறியதாவது: தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் நீங்கலாக பிற மாவட்டங்கள் அனைத்திலும் பரவலாக தென்னை மரங்கள் உள்ளன. குறிப்பாக, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தஞ்சாவூரில் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் தேங்காய் அதிகம் உற்பத்தியாகி றது. தென்னை விவசாயத்துக்கு தண்ணீர் அதிகம் தேவை. ஆனால், வறட்சி காரணமாக 1,000 அடி ஆழத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளிலும் தற்போது தண்ணீர் இல்லை.
குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், பரவலாக தென்னை மரங்களில் காய்ப்பு நின்றுவிட்டது. ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தேங்காய் அறுவடை அதிகம் இருக்கும். ஆனால், இந்தாண்டு அந்த 2 மாதங்களிலும் மிகவும் குறைவான அளவுக்கே தேங்காய் அறுவடை இருக்கும். எனவே, சமையலுக்கு தேவையான தேங்காய்க்கு தட்டுபாடு ஏற்படும். கோயில் வழிபாட்டுக்கான தேங்காய் மற்றும் இளநீர் கிடைக்காத நிலை ஏற்படும். தட்டுப்பாடு காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு தேங்காய் விலை உயரும். மேலும், வறட்சியில் சிக்கி 50 சதவீத அளவுக்கு தென்னை மரங்கள் பட்டுப்போகக் கூடும். சுமார் 30 சதவீத மரங்களில் காய்ப்பு நின்றுவிடும் அபாயமும் உள்ளது.
தென்னை என்பது நெல்லைப் போன்று 120 நாட்களில் நமக்கு பலனை அளிக்காது. குறைந்தது 5 ஆண்டுகள் கழித்துதான் அதன் பயன் கிடைக்கும். எனவே, தென்னை மரங்கள் பட்டுப்போகும் போது தமிழகம் தேங்காய் உற்பத் தியில் பின்னடைவை சந்திக்கும்.
வேலை இழப்பு ஏற்படும்
தமிழகத்தில் தேங்காய் எண்ணெய் பிழியும் ஆலைகள் காங்கேயம், ஊத்துக்குளி, முத்தூர், வெள்ளக்கோயில் பகுதிகளில்தான் அதிகம் உள்ளன. அங்கு மட்டும் 200-க்கும் அதிகமான ஆலைகள் உள்ளன. அந்த ஆலைகள் அனைத்தையும் இன்னும் சில மாதங்களில் மூட வேண்டிய சூழல் ஏற்படும். 10,000க்கும் மேற்பட்ட தேங்காய் உலர் களங்களையும் மூட வேண்டிவரும் என்பதால் ஆயிரக்கணக் கானோர் வேலை இழக்க நேரிடும்.
இவ்வாறு செ.நல்லசாமி கூறினார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த தென்னை விவசாயி ஆர்.ரவிக்குமார் கூறும் போது, “வறட்சியால் தேங்காய் உற்பத்தி குறைந்து விலை அதிகரித்துள்ளது. இதனால், தேங்காயின் உப பொருட்கள் மூலம் நடைபெறும் தொழில்கள் கடும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே நூற்றுக்கணக்கான மரங்கள் பட்டுப்போயுள்ளன. இதுதவிர, தென்னையில் ஹைபிரிட் ரகத்தில் சிலந்தி பூச்சியின் தாக்கமும் அதிகம் உள்ளது. மேலும், வரும் மார்ச் முதல் பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு பானங்களை புறக்கணிக்க இளைஞர்கள், வணிகர்கள் முடிவு செய்துள்ளதால் இளநீரின் விலையும் அதிகமாகும்” என்றார்.
ரூ.30 வரை விற்பனை
சென்னை ஆதாம் மார்கெட் தேங்காய் வியாபாரி கோவிந்தராஜ் கூறும்போது, “வறட்சி காரணமாக தேங்காய் வரத்து பெருமளவு குறைந்துவிட்டது. இதனால், பெரிய தேங்காய் ரூ.25 முதல் ரூ.30-க்கும், சிறிய தேங்காய்களை ரூ.16 முதல் ரூ.20-க்கும் விற்கிறோம். ரூ.15-க்கு கீழ் தேங்காய் இல்லை. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தேங்காய்க்கு தட்டுப்பாடு உள்ளதால், இன்னும் சில மாதங்களில் தேங்காய் விலை கடுமையாக அதிகரிக்கும். கடந்த 40 ஆண்டுகளாக தேங்காய் வியாபாரம் செய்து வருகிறேன். இதுபோன்று என்றைக்கும் விலை உயர்வு இருந்ததில்லை” என்றார்.