தமிழகம்

சென்னையில் செப்.7-ல் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு திறன் பயிற்சி முகாம்

செய்திப்பிரிவு

சென்னையில் செப். 7 முதல் 9 வரை மூன்று நாட்களுக்கு திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு திறன் பயிற்சி முகாம் நடைபெறவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை சியர் தொண்டு நிறுவனமும் எஸ்பிஎஸ் பவுண்டேசனும் இணைந்து நடத்துகிறது. இந்த வேலைவாய்ப்பு திறன் பயிற்சி முகாமுக்கு திரைப்பட இயக்குநர் கிருத்திகா உதயநிதி உறுதுணையாக செயல்பட்டு வருகிறார்.

இது தொடர்பாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள சியர் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் அஸ்வின் கூறுகையில், "சமூக நாகரிகம் அன்றாடம் வளர்ந்து வந்தாலும் சமூகத்தின் கண்ணோட்டத்தில் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாத படைப்புகளாகவே மூன்றாம் பாலினத்தவர் இருக்கின்றனர்.

மூன்றாம் பாலினத்தவர் என்றால் பாலியல் தொழில் செய்பவர்கள், ரயிலிலும், தெருக்கடைகளிலும் பிச்சை எடுப்பவர்கள் என்ற அளவிலேயே பலரும் புரிந்துவைத்திருக்கின்றனர்.

ஆனால், அவற்றில் ஈடுபட்டுள்ள அனைவருமே அதை விரும்பிச் செய்வதில்லை. பிழைப்பதற்கு வேறு வழியில்லாமல் சிலர் இத்தகைய அவலங்களுக்குள் சிக்கிக் கொள்கின்றனர்.

இனியும் இந்த இழிநிலை வேண்டாம் என மாற்றத்துக்காக ஏங்கி நிற்கும் திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நல்லதொரு பாதை காட்டுவதே எங்கள் இலக்கு.

இதற்காகத் தான் சென்னையில் வரும் செப்டம்பர் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு பயிலரங்கு நடத்துகிறோம். இதில் கலந்து கொள்ள கல்வித் தகுதி ஏதும் தேவையில்லை. கட்டணமும் இல்லை. முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்தப் பயிலரங்கில் மூன்றாம் பாலினத்தவர் வேறு தொழில்களில் ஈடுபடும் அளவுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

அடிப்படை ஆங்கிலம், கணினி பயிற்சி, உளவியல் ஆலோசனை, புதிய பணியிடத்தில் எப்படி நடந்துகொள்வது, அங்கு ஏற்படும் தொந்தரவுகளை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற பயிற்சிகள் தரப்பட உள்ளன.

இந்த மூன்று நாள் பயிலரங்கிலும், ஏற்கெனவே திருநங்கைகள் வாழ்க்கைதர மேம்பாட்டுக்காக பல்வேறு பயிற்சிகளை அளித்து வரும் டத்தோயிஸ், ஜோதி தாமஸ், பாதிரியார் ஜோசப் ஜெயராஜ் போன்றோர் விழிப்புணர்வு பாடங்களை பயிற்றுவிக்கின்றனர்.

படித்த பட்டதாரி இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் இத்தகைய திறன் மேம்பாட்டு பயிலரங்குகள், வேலை வாய்ப்பு முகாம்கள் நிறைய நடைபெறுகின்றன. ஆனால், சமூகத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படாத மூன்றாம் பாலினத்தவருக்கான பயிலரங்கு நடத்தப்படுவது இதுவே முதல்முறை" என்றார்.

மேலும் விவரங்களுக்கு : சியர் தொண்டு நிறுவனம்: 91- 9710006555

இமெயில்: helpdesk@cheerngo.com

SCROLL FOR NEXT