தமிழகம்

செய்துங்கநல்லூரில் இரு பிரிவினர் மோதல்: 10 பேர் காயம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்க நல்லூர் ஊராட்சி அலுவலகம் எதிரே, ஸ்ரீ ரெங்கராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் முன் உள்ள மேற்கூரையைச் சுற்றி, சுற்றுச்சுவர் கட்டுவது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே கடந்த 5 ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது.

இதுதொடர்பாக ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் செல்வபிரசாத் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பின், ஒரு குறிப்பிட்ட பகுதி வரை சுற்றுச்சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், நேற்று காலை கோயில் மேற்கூரை பகுதிக்கு முன்புறம் படிகள் கட்ட, ஒரு பிரிவினர் முயற்சி செய்தனர். இதற்கு எதிர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இரு பிரிவினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டதில் 10 பேர் காயமடைந்தனர். 4 மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள், நாற்காலிகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. போலீஸார் குவிக்கப்பட்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அஸ்வின் எம்.கோட்னீஸ், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.

SCROLL FOR NEXT