தமிழகம்

குண்டர் சட்டம் வெறும் அரசியல் பழிவாங்கல்: ராமதாஸ் சாடல்

செய்திப்பிரிவு

குண்டர் சட்டம் வெறும் அரசியல் பழிவாங்கலுக்கு மட்டுமே பயன்படுத்தப் படுவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார். பி.டி. அரசகுமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து ராமதாஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது: தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனரும், தேவரின ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான பி.டி. அரசகுமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது. அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ஆர். தேவரை ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ள காவல்துறை அடுத்து அதே சட்டத்தில் அரசகுமாரையும் சிறையில் அடைத்திருக்கிறது.

மேலும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் அளவுக்கு பி.டி. அரசகுமாரும், எஸ். ஆர். தேவரும் செய்த ஒரே குற்றம் அனைத்து சமுதாய பேரியக்கத்திலும், சமூக ஜனநாயக கூட்டணியிலும் தங்களை இணைத்துக் கொண்டு தீவிரமாக செயல்பட்டு வந்தது தான். அனைத்து சமுதாய பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் அரசகுமார் பங்கேற்று தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

அடுத்ததாக பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான சமூக ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முழுவீச்சில் ஈடுபடவிருந்த நிலையில் , துபாயில் நடந்த சமுதாய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி சென்னை திரும்பிய அரசகுமாரையும், அவரை வரவேற்க வந்த எஸ்.ஆர். தேவரையும் எப்போதோ போடப்பட்ட பொய் வழக்குகளில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதன் பின்னர் அடுத்தடுத்து பொய் வழக்குகளில் கைது செய்து பிணையில் வெளிவர முடியாமல் தடுத்த காவல்துறை, இப்போது ஆட்சியாளர்களின் விருப்பப்படி இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்திருக்கிறது. முழுக்க முழுக்க பழிவாங்கும் நோக்குடன் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஒருவரின் சட்டத்திற்கு எதிரான செயல்பாடுகளை நடைமுறையில் உள்ள சட்டங்களின் மூலம் தடுத்து நிறுத்த முடியாத நிலையில் தான், அவருக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று பல தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளில் அரசகுமாரை காவல்துறை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கிறது என்றால் அது அரசியல் பழிவாங்கல் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT